ஐம்பொன் சிலைகளுக்குப் பதிலாக பித்தளைச் சிலைகள்! பந்தநல்லூரில் அடுத்த அதிர்ச்சி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேவுள்ள பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வந்த சிலைகள் காணாமல் போனது தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில், புதிய திருப்பமாக மேலும் நான்கு சிலைகள் காணாமல் போயிருப்பது தற்பொழுது தெரியவந்துள்ளது. ஐம்பொன் சிலைகள் அபகரிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக பித்தளை வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள 73 கோவில்களுக்குச் சொந்தமான ஐம்பொன் சிலைகள், விஷேச நாள்கள் தவிர மற்ற நாள்களில் பாதுகாப்பு நலன் கருதி, பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதில் 6 சிலைகள் காணாமல் போயிருப்பது, 2013-ம் ஆண்டு இந்து சமய அற நிலையத்துறையின் கணக்கெடுப்பில் தெரியவந்தது. அதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி, இந்து சமய அறநிலையத்துறையின் மூன்று அதிகாரிகளையும், கோவிலின் தலைமை எழுத்தரையும் கைது செய்தனர்.

இது ஒருபுறமிருக்க, புதிய திருப்பமாக, பந்தநல்லூர் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வரும் ஐம்பொன் சிலைகளுக்குப் பதிலாக பித்தளை சிலைகள் வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலை அடுத்து, கோயிலில் உள்ள சிலைகளின் உண்மை நிலையை அறிய, சுற்றுவட்டார கோவில்களின் நிர்வாகிகள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் வரவழைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கீழமணக்குடி காசிவிஸ்வநாதர் கோவிலுக்குச் சொந்தமான அஸ்திரதேவர், சுப்ரமணியர் ஐம்பொன் திருடப்பட்டு அதற்குப் பதிலாக, வேறு சிலைகள் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. குறிச்சி அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான மகாமாரியம்மன், சுவாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பந்தநல்லூர் மற்றும் இதன் வட்டாரப் பகுதிகளில் மீண்டும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேலும் சிலர் கைது செய்யப்பட இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!