தமிழ்நாட்டில் பருத்தி விவசாயிகளை விட்டுவைக்காத பூச்சிக் கொல்லி மரணங்கள்!

பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி வயலுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து அடித்த போது ஐந்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இதுகுறித்து ‘பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் குழு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பல குழுக்களும் பெரம்பலூரில் ஆய்வு செய்துகொண்டிருக்கின்றன.

                    


இதுதொடர்பாக பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பைச் சார்ந்த பார்த்தசாரதியிடம் பேசினோம். பூச்சிக் கொல்லி பாதிப்பால் விவசாயிகள் மரணமடந்துள்ளனர் மற்றும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வந்த செய்திகளை மேற்கோள் காட்டி ‘பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் (SFA) தமிழ்நாடு பிரிவின் உறுப்பினர்கள் எதிர்வினையாற்றியுள்ளனர். “இந்தப் பிரச்னையை முழுமையாகத் தடுத்திருக்க முடியும். இதுவரை அரசு, பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்திருக்கும் விஷயங்களுக்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமலிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று முடித்தார், 


அடுத்தாக இயற்கை வேளாண்மை இயக்கத்தைச் சேர்ந்த ரமேஷ் கருப்பையாவிடம் பேசினோம். அவர் கூறுகையில், ’மஹாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் பூச்சிக் கொல்லி மருந்தின் பாதிப்பால் ஏற்பட்ட மரணங்கள், அதைத் தொடர்ந்து அதே காரணத்தால் தெலுங்கானாவில் ஏற்பட்ட மரணங்கள் ஆகியவை குறித்து தேசிய அளவில் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில், பெரம்பலூர் மாவட்டத்தில் பூச்சிக் கொல்லி விஷ பாதிப்பால் ஏற்பட்டுள்ள மரணங்கள் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன. சித்தளி கிராமத்தைச் சார்ந்த ராஜா, ஒதியம் கிராமத்தைச் சார்ந்த செல்வம், கூத்தூரைச் சார்ந்த ராமலிங்கம், பசும்பலூரைச் சார்ந்த அர்ச்சுனன் ஆகியோர் பூச்சிக் கொல்லி விஷ பாதிப்பால் மரணமடைந்துள்ளனர். இதே காரணத்தால் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“தமிழக அரசு இதுவரை இந்த விஷயத்தில் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பூச்சிக் கொல்லி விஷ பாதிப்பு விஷயத்தில் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய முறையான விசாரணையை நடத்த வேண்டும். இதன் மூலம் அடுத்து வரும் காலத்திலும், எதிர் காலத்திலும், இதுபோன்ற மரணங்களைத் தடுக்க முடியும். இது அடிப்படையில் எங்களது விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வதற்கான உரிமையை பறித்துள்ளது. மேலும், இது பி.டி. பருத்தியில் பூச்சிக் கொல்லி பயன்படுத்துவதால் வரும் விளைவு என்பது தெளிவாகியுள்ளதால், மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தின் தோல்வி குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளது’’.

 பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் அனந்து நம்மிடம் பேசினார். ’ஒவ்வொரு வருடமும், உலகம் முழுக்க 2,00,000 பேர் பூச்சிக்கொல்லி விஷ பாதிப்பால் இறப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்தில் பயன்படுத்தும் விஷ ரசாயனங்களால் இந்தியாவில் ஆண்டுக்கு 10,000 விவசாயத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது மிகக் குறைவான மதிப்பீடே. ஏனெனில், இது போன்ற புள்ளி விவரங்களைச் சேகரித்து, ஆய்வு செய்து முறையாக வெளியிடும் வழிமுறைகள் ஏதுமில்லாததே இதற்குக் காரணம். பெரும்பாலும் பூச்சிக் கொல்லிகளின் தொழில்நுட்பத் தோல்விகளுக்கு விவசாயிகள் பலிகடாவாகின்றனர். பூச்சிகளுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்னைகளை இந்தத் தொழில்நுட்பங்கள் உருவாக்குகின்றன. பூச்சிக் கொல்லிகளுக்கு மிக அதிகப்படியான விளம்பரங்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் அனுமதிக்கப்பட்டிருப்பதாலும் விவசாயிகள் ஏமாந்து அவற்றிற்கு பலியாகின்றனர்.

பூச்சிக் கொல்லி விஷபாதிப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது. ஆஷா ASHA (Alliance for Sustainable & Holistic Agriculture) அமைப்பைச் சார்ந்த கவிதா குருகண்டி, பஞ்சாபின் பொதுநல நிபுணர் டாக்டர் அமர் சிங் ஆசாத் ஆகியோருடன் நானும் இந்த வழக்கில் மனுதாரராகச் சேர்ந்திருக்கிறேன். பூச்சிக் கொல்லி விஷ பாதிப்பு விஷயத்தில் பெரும்பாலும், பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கும் அணுகுமுறையைப் பூச்சிக் கொல்லி கம்பெனிகளும், அரசும் கடைபிடிக்கின்றன. இதை ஏற்றுக்கொள்ள முடியாது  “நம் விவசாயிகளின் சமூகப் பொருளாதாரச் சூழல், கம்பெனிகளின் சந்தைப்படுத்தும் முறைகள், அரசுத் துறைகளின் தோல்வி ஆகியவை பாதுகாப்பான பூச்சிக் கொல்லிப் பயன்பாட்டை அனுமதிப்பதில்லை. பெரும்பாலும் வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகள் இந்தியாவில் விற்கப்படுகின்றன. பெரம்பலூர் விஷ பாதிப்புக்குக் காரணமான பூச்சிக் கொல்லி நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய தமிழக அரசால் முடியும். தமிழக அரசு அதைச் செய்ய வேண்டும்” என்று முடித்தார்.

 

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் மரணங்கள் மற்றும் மருத்துவமனைகளில் விவசாயிகள் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து உடனடியாக கடுமையான நடவடிக்கையும், மீண்டும் இது போன்ற விஷயங்கள் நடக்காத வகையிலான தடுப்பு நடவடிக்கைகளும் தேவை; இந்தப் பிரச்னையில் சம்பந்தப்பட்ட பூச்சிக் கொல்லி கம்பெனிகள், முகவர்கள், வணிகர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; பல்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; நிவாரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சமும் உடனடியாக வழங்க வேண்டும்” என்ற கோரிக்கைகளைப் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!