நெல்லை மாவட்டச் செய்தியாளர்கள்மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து!

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி மலை தொடர்பான செய்தியை வெளியிட்டதற்காக 3 செய்தியாளர்கள்மீது தொடரப்பட்ட வழக்கு, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து முடித்துவைக்கப்பட்டது. 

செய்தியாளர்கள் மீது வழக்கு

நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள மகேந்திரகிரி மலையில் இஸ்ரோ மையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் திரவ இயக்க உந்தும மையம் அமைந்துள்ளது. இந்த மையத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் மலைப் பகுதியிலிருந்து புகை மண்டலம் எழுந்ததாகச் செய்திகள் வெளியாகின. பாறை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட சத்தத்தை அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கேட்டதாகவும் தகவல் வந்தது.

இதுதொடர்பாக அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. ஆனால், குறிப்பிட்ட 3 செய்தியாளர்கள்மீது மட்டும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள செய்தியாளர் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். செய்தி வெளியிட்டதற்காக தொடரப்பட்ட வழக்கை ரத்துசெய்யக்கோரி, போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதையடுத்து, இந்த வழக்கு ரத்து செய்யப்படும் என உயர் அதிகாரிகள் உறுதியளித்தனர். 

ஆனால், உள்நோக்கத்துடன் பணகுடி செய்தியாளரான ஜெகன் என்பவர்மீது மற்றொரு வழக்குத் தொடரப்பட்டது, அந்த வழக்கில் அவரைக் கைதுசெய்த போலீஸார், மகேந்திரகிரி மலை தொடர்பான வழக்குத் தொடர்பாகவும் கைதுசெய்தனர். அதைத்தொடர்ந்து, அதிகாரிகளிடம் முறையிட்டதைத் தொடர்ந்து அந்த வழக்கை திருப்பிப் பெற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை நீதிமன்றத்தில், பாதிக்கப்பட்ட ஜெகன் சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், தன் மீதும் மேலும் இரு செய்தியாளர்கள் மீதும் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு வலியுறுத்தினார். இந்த வழக்கில் பதில் அளித்த காவல்துறை, மூன்று செய்தியாளர்கள் மீதான மேல்நடவடிக்கை கைவிடப்பட்டடதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றக் கிளை வழக்கை முடித்து வைத்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!