வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (05/12/2017)

கடைசி தொடர்பு:07:55 (06/12/2017)

’வங்கிகள் முறையாக நடந்துகொண்டிருந்தால் 80 சதவிகித கடனை அடைத்திருப்பேன்!’ லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா வாதம்

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா விமான சேவை நிறுவனம் தொடங்குவதற்காக 9000 கோடி கடன் வாங்கியிருந்தார். கடனை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பியோடினார் விஜய் மல்லையா.

விஜய் மல்லையா

அந்நியச் செலாவணி ஒழுங்குமுறை விதிகளை மீறியதாக விஜய் மல்லையாமீது பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கில், டிசம்பர் 18-ம் தேதி ஆஜராகாத பட்சத்தில் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

இந்தநிலையில், அவரை நாடு கடத்தக்கோரி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை வரும் 14-ம் தேதிக்குள் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வார நாள்களில் புதன் மற்றும் வெள்ளி தவிர மற்ற நாள்களில் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்றுவருகிறது. நேற்று விசாரணை தொடங்கியது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஸ்டேட் பேங்க் மற்றும் ஐ.டி.பி.ஐ வங்கிகளில் கிங்ஃபிஷர் நிறுவனம்மீது பொய்யான தகவல்களைச் சமர்ப்பித்து 9000 கோடி கடன் பெற்றிருக்கிறார். வாங்கியக் கடனை திரும்பிச் செலுத்தாமல் மோட்டார் சைக்கிள் பந்தயம், சொந்தப் பயன்பாடு எனத் தவறான வழிகளில் விஜய் மல்லையா அவற்றைப் பயன்படுத்தியிருக்கிறார்“ என வாதிட்டார். 

விஜய் மல்லையா தரப்பில் இன்று வாதிட்ட வழக்கறிஞர் கிளார் மாண்ட்கோமரி, ‘அவர் மீதான மோசடி குற்றச்சாட்டை நிரூபிக்க இந்திய அரசிடம் எந்த ஆதாரமும் இல்லை. இந்திய வங்கிகள், அவர் வாங்கிய கடனுக்காக அவரை வலைபோட்டுத் தேடி வேட்டையாடும் நடவடிக்கையில் ஈடுபட்டன. வங்கிகள் முறையாக நடந்துகொண்டிருந்தால், விஜய் மல்லையா வாங்கிய கடனில் 80 சதவிகிதம் வரை கட்டியிருப்பார். இந்திய வங்கிகள் தரப்பில் கூறப்படுவதைப் போல வங்கிகளை ஏமாற்றி மூழ்கிக்கொண்டிருந்த கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைக் காரணம் காட்டி அவர் கடன் பெறவில்லை’ என்று வாதிட்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க