விலையில்லா ஆடு வழங்க லஞ்சம்! பயனாளிகள் பட்டியலை ரத்துசெய்த மாவட்ட ஆட்சியர்

திருச்சி பொன்மலைப் பகுதியில் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்க ஆயிரம் ரூபாயும், ஒரு ஆடும் லஞ்சமாகக் கேட்பதாக அப்பகுதி பெண்கள் குற்றம்சாட்டினார்கள். 
கீழக்குறிச்சிப் பெண்கள்
திருச்சி மாவட்டம் பொன்மலை அருகே உள்ளது கிழக்குறிச்சி. அந்த ஊரையொட்டியுள்ள கீழகண்டார்கோட்டை, கீழக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் விலையில்லா ஆடு வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், கீழக்குறிச்சி அண்ணாநகரைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரில், ’கீழக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் மற்றும் உதவியாளர் மகாலெட்சுமி, கிராம வறுமை ஒழிப்பு நிர்வாகிகள், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே விலையில்லா ஆடுகள் வழங்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியதுடன், இதுகுறித்து விசாரணை நடத்திடவும் அவர்கள் கோரிக்கைவைத்தனர். 
 
இந்நிலையில், இந்தப் புகார்மீது விசாரணை நடத்தவும், சர்ச்சைக்குரிய விலையில்லா வெள்ளாடுகள் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வை ரத்துசெய்து திருச்சி மாவட்ட ஆட்சியர் இராசாமணி உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இராசாமணியிடம் பேசினோம். அவர் கூறுகையில், ’கிழக்குறிச்சி அண்ணா நகரில், விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு நடைபெற்றது. பயனாளிகள் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், தகுதியானவர்களுக்குக் கிடைக்கப்பெறவில்லை எனவும் அப்பகுதி மக்கள், குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் அளித்தனர். புகார் மனு வரப்பெற்றதை அடுத்து அப்பகுதியில் நடைபெற்று வந்த பயனாளிகள் தேர்வு உடனடியாக ரத்துசெய்தும், இப்புகார் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புகாரில் உண்மை இருப்பின், அதற்குக் காரணமானவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
 
கால்நடை பராமரிப்புத்துறை மூலம் விலையில்லா வெள்ளாடுகளுக்கான பயனாளிகள் தேர்வு செய்திட அரசு, தெளிவான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிராம அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டு தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு கிராம சபை ஒப்புதலுக்குப் பின்னரே இறுதி செய்யப்படும். தகுதியுள்ள பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!