வெளியிடப்பட்ட நேரம்: 23:33 (05/12/2017)

கடைசி தொடர்பு:07:38 (06/12/2017)

`இதில் எங்கு ஜனநாயகம் இருக்கிறது..!' - வேட்புமனு நிராகரிப்பால் விஷால் ஆவேசம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக விஷால் தாக்கல்செய்திருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து விஷால் செய்தியாளர்களைச் சந்தித்து, `ஜனநாயகத்தைக் கேலியாக்கியுள்ள நடவடிக்கை இது' என்று பொங்கியுள்ளார். 

விஷால்

இதுகுறித்து பேசிய விஷால், `வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. அதை என்னிடம் அறிவித்த அதிகாரிகளே இப்போது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்று கூறுகின்றனர். இதில் எங்கு ஜனநாயகம் இருக்கிறது. எதற்காக என்னைப் பார்த்து பயப்படுகிறார்கள். ஏன் இவ்வளவு தரக்குறைவாக நடந்துகொள்கிறார்கள். என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. படத்தில் நடக்கும் காட்சிபோல நிமிடத்துக்கு நிமிடம் கருத்துகளை மாற்றிக் கூறுகின்றனர் அதிகாரிகள். சுயேச்சையாக போட்டியிடுவதில் இத்தனை சிக்கல்கள் இருக்கும் என்று நினைத்தே பார்க்கவில்லை. ஜனநாயகத்தைக் கேலியாக்கியுள்ள நடவடிக்கை இது' என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

இந்த விஷயம்குறித்து தேர்தல் அலுவலர், `விஷாலை முன்மொழிந்த 10 பேரில் 2 பேர், நாங்கள் அவரை முன்மொழியவில்லை என்று நேரில் விளக்கம் அளித்தனர். சுமதி மற்றும் தீபன் ஆகிய இருவரும்தான் விஷாலை முன்மொழியவில்லை என்று கூறியுள்ளனர். சுயேச்சையாகப் போட்டியிடும் நபரை தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும். ஆனால், 8 பேர்தான் அவரை முன்மொழிந்தனர். எனவே, அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது' என்று விளக்கம் அளித்துள்ளார்.