`விஷாலின் வேட்புமனு நிராகரிப்பில் ஆளுங்கட்சி தலையீடு உள்ளதா?' - திருமாவளவன் கருத்து

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக விஷால் தாக்கல்செய்திருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேசியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், `தேர்தல் அலுவலர் சுதந்திரமாக செயல்படவில்லை. அவர் நீக்கப்பட வேண்டும்' என்று கருத்து கூறியுள்ளார். 

திருமாவளவன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு விஷால் தாக்கல்செய்த வேட்புமனு இன்று மதியம் நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து, வேட்புமனு  நிராகரிப்புக்கு எதிராக விஷால் சாலை மறியலில் ஈடுபட்டார். மேலும், தனக்கு முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டனர் என்று குற்றம்சாட்டினார். மேலும், அந்தக் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் விதமாக ஆடியோ பதிவு ஒன்று வெளியிட்டார். அந்த ஆடியோ பதிவு வைரலாகி வந்த நிலையில், விஷால் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பேசிய திருமாவளவன், `விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது முற்றிலும் ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கை. தேர்தல் அலுவலர் சுதந்திரமாக இயங்கவில்லை என்பதற்கு சான்று இது. ஆளுங்கட்சியின் தலையீடு இந்த விஷயத்தில் இருக்கிறது என்பது தெரிகிறது. தேர்தல் அலுவலர் உடனடியாக அவரது பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை இது. வாக்குகள் பிரியலாம் என்ற நோக்கில் ஆளுங்கட்சி இந்த வேலையை செய்திருக்கலாம். வாக்கு வங்கியுள்ள அரசியல் கட்சிகள் களத்தில் இருக்கிறார்கள். எனவே, விஷால் போட்டியிட்டிருந்தாலும் ஜெயித்திருப்பார் என்று சொல்வதற்கில்லை' என்று கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!