`அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?' - விஷால் அறிவிப்பு | Will brief about my next plan soon, Vishal

வெளியிடப்பட்ட நேரம்: 00:05 (06/12/2017)

கடைசி தொடர்பு:09:34 (06/12/2017)

`அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?' - விஷால் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக, நடிகர் விஷால் தாக்கல்செய்திருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, அரசியல் தளத்தில் பெரும் சலசலப்பைக் கிளப்பியுள்ள நிலையில், தனது அடுத்தகட்ட நடவடிக்கைகுறித்து விஷால் தெரிவித்துள்ளார்.

விஷால்

இதுகுறித்துப் பேசிய விஷால், `அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி இன்றே அறிவிப்பேன். சுயேச்சையாக நிற்கும் இளைஞரில் ஒருவருக்காக பிரசாரம் செய்து ஜெயிக்கவைப்பேன். எனது மனுவை ஏற்பதில் பிரச்னை என்று தெரிந்தவுடன், பல சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் அலுவலரிடம் நேரடியாக வந்து நியாயம் கேட்டனர். அவர்களுக்குத் தெரியும் உண்மை யார் பக்கம் இருந்தது என்பது. எனவே, அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து பிரசாரம் செய்வேன். அவர்களின் வெற்றிக்குப் பாடுபடுவேன். இதுகுறித்து இன்றே அறிவிப்பேன்' என்று முடித்துக்கொண்டார். 

இந்த விஷயம்குறித்து, `விஷாலை முன்மொழிந்த 10 பேரில் 2 பேர், நாங்கள் அவரை முன்மொழியவில்லை என்று நேரில் விளக்கம் அளித்தனர். சுமதி மற்றும் தீபன் ஆகிய இருவரும்தான் விஷாலை முன்மொழியவில்லை என்று கூறியுள்ளனர். சுயேச்சையாகப் போட்டியிடும் நபரை தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும். ஆனால், 8 பேர்தான் அவரை முன்மொழிந்துள்ளனர். எனவே, அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது' என்று விளக்கம் அளித்துள்ளார் தேர்தல் அலுவர் வேலுசாமி.