மழைநீரில் திருபுவனம் பட்டுப்புடவைகள் பாதிப்பு... அதிகாரிகள் அலட்சியத்தால் நேர்ந்த அவலம்!

காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளுக்கு அடுத்தபடியாக, திருபுவனம் பட்டுப்புடவைகள் மிகவும் பிரபலமானவை. இந்நிலையில், திருபுவனத்தில்  இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டுப்புடவைகளில் மழைநீர் ஒழுகியதால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டுப்புடவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகளின் அலட்சியத்தின் காரணமாகவே இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக இங்குள்ள பட்டு நெசவாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். 

 

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான நெசவாளர் குடும்பங்கள் பட்டு நெசவில் ஈடுபட்டுவருகின்றன. இவர்கள் உற்பத்திசெய்து தரக்கூடிய பட்டுப்புடவைகள், இங்குள்ள சோழன் பட்டு கூட்டுறவு சங்கம் மூலமாக விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பட்டுப்புடவை வர்த்தகம் நடைபெறுகிறது. ஆனால், இந்த கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமான குடோனின் நிலையோ மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இது மிகவும் பழைமையான கட்டடம் என்பதால் மழைநீர் ஒழுகக்கூடிய ஆபத்து இருப்பதாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நெசவாளர்கள் எச்சரித்துவந்துள்ளார்கள். ஆனாலும் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால், மழைநீர் ஒழுகி, இங்கு வைக்கப்பட்டிருந்த பட்டுப்புடவைகள் சேதம் அடைந்துள்ளன. 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலை மதிப்புகொண்ட ஏராளமான பட்டுப்புடவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!