`திம்பம் மலைப்பாதையில் அதிக எடையோடு வாகனம் செல்லக்கூடாது' - கோரிக்கை வைக்கும் மக்கள்

'ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் டு தாளவாடி மலைப்பாதையில், அளவுக்கு அதிகமான பொருள்களை வாகனங்களில் ஏற்றிவருவதால், மலைப்பாதையில் பாதியிலேயே நின்றுவிடுகின்றன. மேற்கொண்டு எந்த வாகனமும் மேலேயும் கீழேயும் செல்ல முடிவதில்லை. இதனால் பசியாலும் வன விலங்குகளில் அச்சத்தாலும் பயந்து நடுங்கவேண்டிய நிலை ஏற்படுகிறது'  என்கிறார்கள், சத்தியமங்கலம் மலைவாழ் மக்கள்.

இதுபற்றி தாளவாடியைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம், 'ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் டு தாளவாடி மலைப் பாதையில் அளவுக்கு அதிகமான பொருள்களை வாகனங்கள் ஏற்றிக்கொண்டு செல்லும்போது, 20 வளைவுகளில் செல்ல முடியாமல் நடு ரோட்டிலேயே நின்றுவிடுகின்றன. இல்லையென்றால், மலையிலிருந்து  தலைகுப்புற கீழே கவிழ்ந்துவிடுகிறது. இப்படி வாரத்தில் 5 வாகனங்கள் மலைப்பாதையிலிருந்து விழுவதும், ரோட்டில் நின்று விடுவதுமாக இருக்கிறது. இதனால், திம்பம், காளிதிம்பம், ஆசனூர், தாளவாடி  மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள்  கீழிருந்து மேலேயும், மேலிருந்து கீழேயும் வர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.  இரவு நேரத்தில், கைக்குழந்தைகளுடன் காட்டுக்குள் இருப்பவர்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

யானை, புலி போன்ற வன விலங்குகள் வந்து அச்சுறுத்தும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களால், பழங்குடியின மக்கள் பலர் மரணம்கூட அடைந்திருக்கிறார்கள். மலைப்பாதையில் இரண்டு மூன்று நாள்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாததால், அங்கு விளையும் உருளைக்கிழங்கு, மக்காச்சோளம், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், வெங்காயம் போன்ற விளைபொருள்களைக்  கீழே கொண்டுவர முடியாத நிலையும் உருவாகிறது. வாகனங்கள் மலைப்பாதைக்குள் நுழையும்போது, சரியான எடையோடு மேலே ஏறுவதற்கு அனுமதித்தால், இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க முடியும் என்று கூறி, விவசாய சங்கங்கள்மூலம் சத்தியமங்கலத்தில் போராட்டம் நடத்தி, கலெக்டர், தாசில்தார், வனத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இறுதியாக, இந்த முறை ஆட்சியரை சந்தித்து சரியான எடையுடன்கூடிய வாகனத்தை மட்டுமே மலைப்பாதையின் மேல் ஏற அனுமதிக்க வேண்டும். அதிக எடையோடு வரும் வாகனங்களை மேலே அனுமதிக்கக்கூடாது. என்ற கோரிக்கை மனுவைக் கொடுக்க இருக்கிறோம். இதன் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாபெரும் போராட்டத்தை அறிவிப்போம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!