பவானி ஆற்றை 20 ஆண்டுகளாக காக்கப் போராடுபவரை மிரட்டும் அரசு அதிகாரி!

''பவானி ஆற்றில், குருசாமி என்பவர் முறைகேடாகத் தொடர்ந்து மணல் அள்ளிவருகிறார். அவர்மீது கிராம நிர்வாக அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மணல் அள்ளும்போது கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுத்தால், தடுத்து நிறுத்துவதில்லை. மாறாக, கிராம நிர்வாக அதிகாரியும் மணல் கொள்ளையர்களும் என்னை மிரட்டுகிறார்கள்'' என்கிறார், சமூக ஆர்வலர் நெல்லையன்.

இதுபற்றி சமூக ஆர்வலர் நெல்லையன், ''நான் பவானி ஆற்றில் மணல் கொள்ளையை எதிர்த்து கடந்த 20 ஆண்டுகளாகப் போராடி வருகிறேன். ஆனால், மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. என்னுடைய கிராமம் பவானி தாலுகா பெருந்தழையூர் அருகே உள்ள செரையாம்பாளையம். 

 இந்தப் பகுதியில், கவுந்தம்பாடி காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் போலீஸ் நாகராஜின் அண்ணன் குருமூர்த்தி, தொடர்ந்து மணல் அள்ளிவருகிறார். இதுசம்பந்தமாக நான் பெருந்தழையூர் கிராம நிர்வாக அதிகாரி ராசாமணியிடம் புகார் கொடுத்தேன். அந்த அம்மா சம்பந்தப்பட்டவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆர்.ஐ-யிடம் புகார் கொடுத்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. எங்க பகுதியில் பவானி ஆற்றில் 20 அடிக்குக் கீழே மணல் அள்ளிவிட்டார்கள். இதனால், நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. விவசாயம் செய்ய முடியவில்லை.

கிராம நிர்வாக அதிகாரி ராசாமணி, சம்பந்தப்பட்டவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு என்னை நேரடியாக மிரட்டுகிறார்.  என்னை பெட்டிஷன் பார்ட்டி என்று என்னைப் பற்றியும் புகார் கொடுத்துக் கொண்டிருக்கிறார். உன்னை தொலைத்துவிடுவேன் என்று மிரட்டுகிறார். நான் சொல்வதை, சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லிவிடுகிறார். இதனால் அவர்கள், எனக்கு பகிரங்கமாக மிரட்டல்கள் விடுகிறார்கள். என் உயிருக்கு மணல் கொள்ளையர்களாலும், அரசு அதிகாரிகளாலும் ஆபத்து இருக்கிறது. எனக்கு பாதுகாப்பு வழங்குவதோடு, பவானி ஆற்றில் மணல் அள்ளுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!