பயிர்க் காப்பீடு வழங்குவதில் இழுபறி... கொதிப்பில் விவசாயிகள்!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் 2016- 2017 ஆண்டு விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்திருந்தனர். விவசாயம் பாதிக்கப்பட்டதால் பயிர் காப்பீட்டுத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. மறவமங்கலம் பாண்டியன் கிராம வங்கியைத் தவிர மற்ற வங்கியில் காப்பீடு செய்தவர்களுக்கு பணம் வழங்கப்பட்டு 2 மாதங்கள் ஆகிவிட்டன. மறவமங்கலம் பாண்டியன் கிராம வங்கியில் மட்டும் பணத்தை பாஸ்புக்கில் பதிவுசெய்து கொடுத்தும் காப்பீட்டுப் பணத்தை வழங்க மறுக்கிறார் வங்கி மேலாளர். அதே நேரத்தில் அவருக்கு  வேண்டிய நபர்களுக்கு மட்டும் காப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளார் . மற்ற விவசாயிகளை அலையவிட்டுவருகிறார். இவ்வங்கியில் ஏ.டி.எம் வசதி கிடையாது என்பதால், தினமும் வங்கியை முற்றுக்கையிட்டுவருகின்றனர் விவசாயிகள். 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் காளையார்கோவில் ஒன்றியச் செயலாளர் திருநாவுக்கரசு பேசும்போது... "நடப்பாண்டு (2017-2018) கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் காப்பீடு செய்ய அனுமதிக்கப்படவில்லை. அதற்கு மாறாக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்கி அடங்கல், நோட்டரி அட்வகேட் சான்றிதழ்களோடு வருபவர்களுக்கு மட்டுமே காப்பீடு பதிவுசெய்யப்படும் என்று சொல்லியிருந்தது வங்கி. ஏற்கெனவே, பயிர்க் காப்பீட்டுத் தொகையில் மோசடிசெய்து பணம் சம்பாதித்தவர்கள் அதிகம். அதில் ருசிகண்ட பூனை சும்மா இருக்குமா? காளையார்கோயில் அருகிலுள்ள மாராத்தூர் குரூப் தலையாரி காளீஸ்வரன், வி.ஏ.ஓ ரீட்டாமெர்சின் இவர்கள் சேர்ந்து போலிமுத்திரை, போலி அடங்கல் ஆவணம் தயார்செய்து பயிர்க் காப்பீடு பதிவுசெய்திருக்கிறார்கள். இதை நாங்கள் கண்டுபிடித்து மேல் அதிகாரிகளுக்குச் சொல்லியபிறகு, தற்போது தலையாரியை மட்டும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். அதே நேரத்தில், காளையார்கோயில் பாண்டியன் கிராம வங்கியில் 52 விவசாயிகளுக்கு வந்த காப்பீட்டுப் பணத்தை இன்னும் வழங்காமல் இழுத்தடித்து வருகிறார்கள். விவசாயத்தை இவர்களே நசுக்கிவிடுவார்கள். மாற்றுத் தொழில் தேடவேண்டிய கட்டத்துக்கு அரசு எங்களைத் தள்ளிக்கொண்டிருக்கிறது. உலகமயமாதல் மூலமாக வெளிநாட்டினர் நமக்கான தேவைகளை முடிவுசெய்யும் நிலை வந்துவிட்டது. காலப்போக்கில், படிப்படியாக விவசாயம் அழிந்துவிடும். பிறகு, ஜல்லிக்கட்டுக்குப் போராடியதுபோல நாம் விவசாயம் செய்யவும் போராட வேண்டிய நேரம் வரும்'' என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!