புதுச்சேரியில் அரசுப் பள்ளிக் கட்டடம் இடிந்து இருவர் உயிரிழப்பு!

புதுச்சேரியில், அரசுப் பள்ளிக் கட்டடத்தை இடிக்கும்போது ஏற்பட்ட விபத்தால், பள்ளி ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரி வில்லியனூரை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் அன்சாரி துரைசாமி அரசு மேனிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியின் ஒரு பிரிவுக் கட்டடம் சுமார் 32 ஆண்டுகள் பழைமையானது. புதிய பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டுவிட்டதால், பழைய கட்டடத்தை இடிக்கும் பணி கடந்த 3-ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்நிலையில், நேற்று (5.12.2017), பழைய கட்டடத்தை இடிக்கும் பணி நடந்துகொண்டிருந்தபோது, அதில் இருந்த பொருள்கள் அனைத்தும் எடுக்கப்பட்டுவிட்டதா என்பதைப் பள்ளியின் கண்காணிப்பாளர் சிவபாரதி, ஊழியர்கள் அய்யனார், மதிவாணன் ஆகியோர் சென்று பார்த்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக மொத்தக் கட்டடமும் சரிந்து நால்வர் மீதும் விழுந்தது.

அரசுப் பள்ளி

அதில் படுகாயமடைந்த நான்கு பேரும் உடனே ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், சிவபாரதி மற்றும் பிள்ளையார்குப்பம் பேட் பகுதியைச் சேர்ந்த அய்யனார் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது. இதனால் இந்தப் பள்ளிக்கு இன்று (6.12.2017) விடுமுறை விடப்பட்டுள்ளது. கட்டடம் இடிக்கும் பணியின்போது மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்ததால், பெரிய அளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!