`இயற்கையோடு இணைந்த விவசாயத்தில் ஈடுபட வேண்டும்' - குன்றக்குடி அடிகளார் பேச்சு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள கிராமியப் பயிற்சி மையத்தில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்ககம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், உலக மண்வள தின விழா விழிப்பு உணர்வுப் பயிலரங்கம், கண்காட்சி  ஆகியவை நேற்று நடைபெற்றன. கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டி.கருணாகரன் தலைமை வகித்தார். மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சி.செல்வம் முன்னிலை வகித்தார். வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் சு.செந்தூர்குமரன் வரவேற்றார்.


 

இதில், மண்வளம் கையேடு, மண் பரிசோதனை அட்டைகளை விவசாயிகளுக்கு வழங்கி, குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் பேசும்போது, `தமிழர்கள் மண்ணையும் பெண்ணையும் போற்றிப் பாதுகாத்தவர்கள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 வகை நிலங்களுக்குச் சொந்தக்காரர்கள் தமிழர்கள். உலகில் யாரும் கையாளாத 5 வகை நிலங்களையும் கையாண்டவர்கள் தமிழர்கள்.
பாலை நிலம் இயற்கை நமக்குக் கொடுத்த கொடையல்ல. மண்ணைப் பண்படுத்தத் தெரியாமல் உழைக்கத் தயங்கியதால் ஏற்பட்டது பாலை நிலம். எனவே, இயற்கைக்கு நாம் கொடுத்த கொடைதான் பாலை நிலம். அப்படிப்பட்ட பாலை நிலத்தையும் உழைப்பால் சோலையாக்கியவர்கள் தமிழர்கள். ஆண்களுக்கு நிகராக வேளாண்மை செய்தவர்கள் பெண்கள். ஜல்லிக்கட்டு காளைகளையும் அன்பாய் வளர்த்தவர்கள் தமிழ்ப்பெண்கள். எதிர்காலத் தலைமுறைக்கு நாம் வளமான மண்ணை விட்டுச்செல்ல வேண்டும். அதற்காக, கால்நடை வளர்ப்புகள் மூலம் இயற்கை உரங்களை இட்டு, மண்வளத்தைப் பாதுகாக்க வேண்டும். தற்போதைய இளம் தலைமுறையினர் எதிர்த் திசையில் செல்லாமல், நேர் திசையில் இயற்கையோடு இணைந்த விவசாயத்தில் ஈடுபடவேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிட, விவசாயம் சார்ந்த உப தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!