"கலெக்டரை பார்க்க பெண்கள் போகக்கூடாது"- தடுத்த பெண் காவலர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண்களை வாசலிலேயே தடுத்து நிறுத்தி, வாதம்செய்த பெண் காவலர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.


கொத்தமங்கலம் பகுதி மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், செவ்வாய்க்கிழமையன்று ஊர் பெரியவர்கள் சிலருடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்திருந்தார்கள்.

"எங்கள் ஊரில் செயல்பட்டுவந்த மதுபானக்கடையை கடந்த மே மாதம்தான் ஊர் மக்கள் சேர்ந்து போராடி அடைத்தோம். அதை மறுபடியும் திறப்பதற்கு டாஸ்மாக் அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர். அந்தக் கடையை மீண்டும் திறக்கக்கூடாதுனு மனு கொடுக்க வந்தோம். எங்களை வாசலிலேயே தடுத்து நிறுத்தி, 'ஐந்து ஆண்கள் மட்டுமே ஆட்சியரைப் பார்க்க முடியும், பெண்கள் பார்க்க அனுமதிக்க முடியாது'னு ரேவதி என்ற பெண் காவலர் தடுத்து நிறுத்திட்டாங்க" என்று கொதித்தனர் கொத்தமங்கலத்திலிருந்து வந்திருந்த அந்தப் பெண்கள்.

அவர்களோடு வந்திருந்த விவசாய அமைப்புகளைச் சேர்ந்த பெரியவர்கள், அந்தப் பெண் காவலரோடு தங்கள் ஊர் பெண்களுக்காக ஒரு மணி நேரம் போராடி, வாதம்செய்து அழைத்துச்சென்றிருக்கிறார்கள். மகளிர் சுய உதவிக் குழுத் தலைவியான இந்துராணி என்பவர் கூறும்போது, "நாங்கள் ஊர் நலன் சார்ந்த பிரச்னைக்காக கலெக்டரைப் பார்க்க வந்த இடத்தில், பெண் போலீஸே பெண்களைத் தடுப்பது இன்னொரு சமூகக் கொடுமையாக இருக்கிறது. இதற்காகவென்றே தனியாக ஒரு போராட்டம் நடத்த வேண்டும்போலிருக்கிறது" என்றார்.

போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, 'மாவட்ட ஆட்சியரைக் காண்பதற்கு இரண்டிலிருந்து ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்  என்று எங்கள் மேலதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள். அதைத்தான் அந்தப் பெண் காவலரும் செய்திருக்கிறார். இது ஆண்கள், பெண்கள் எல்லாருக்குமே பொதுவானதுதான்" என்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!