வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (06/12/2017)

கடைசி தொடர்பு:15:33 (09/07/2018)

முன்னேற்றம் அடைந்த கிராமத்தில் சாதி மோதல் அபாயம்! போலீஸை அலர்ட் செய்யும் விவசாய சங்கங்கள்

ஆலங்குடி, கொத்தமங்கலம் ஆகிய இரண்டு ஊர் இளைஞர்களிடையே, சமீபகாலமாக ஜாதி ரீதியான சின்னச்சின்ன மோதல்கள் நடந்து வருவது, அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படியான சிறு சம்பவங்கள் இரண்டு ஊர் இளைஞர்கள் மனத்திலும் வன்மத்தீயைப் பற்றவைத்திருப்பதைக் கண்டுகொண்ட  அப்பகுதி சமூகநல களப்பணியாளர்கள், பெரிய அளவில் ஜாதி மோதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதைக் கண்டுணர்ந்து, எச்சரிக்கை செய்துவருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெயர் சொல்லும்படியாக மிக வேகமாக முன்னேறி வரும் ஊர்களில் ஆலங்குடியும் கொத்தமங்கலமும் முக்கியமானவை.  பத்து வருடங்களுக்கு முன், ஜாதிக் கட்டமைப்புக்குள் தீவிரமாக இயங்கிவந்த இந்த இரண்டு ஊர்களுமே, மெள்ள அதிலிருந்து விடுபட்டு ஊர் முன்னேற்றம், சுயமுன்னேற்றம், கல்வி முன்னேற்றம் ஆகியவற்றில் தன்முனைப்புடன் ஈடுபட்டு, இன்றைக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னேற்றம் அடைந்த பகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில்தான், பேருந்துப் பயணங்களில், கடைவீதிகளில், பார்களில் கூடும் இரண்டு ஊர்களைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில், ஜாதி ரீதியிலான மோதல் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின்  புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர் துரைராஜ், "இரண்டு ஊர் மக்களுமே இப்போதும் ஜாதி நினைப்பு இல்லாமல் ஒருதாய் பிள்ளைகளாகத்தான் பழகிவருகிறார்கள். அரசியல் கட்சிகளாலும் ஜாதிய பிரமுகர்களாலும் தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்கள், இப்போது இரண்டு ஊர்களுக்கிடையே ஜாதி மோதல் ஏற்படும் விதமாகச் செயல்பட்டுவருகிறார்கள். ஊர் பொதுநலனுக்குக் குந்தகம் விளைவிக்கும் விதமாக அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. இந்தச் செயல், பொதுநலன் தளத்தில் இயங்கிவரும் என்னைப் போன்றவர்களுக்குப் பெரும் கவலை அளிக்கிறது. இப்படியான மோதல்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடுவே வரும்போது, இரண்டு ஊர் பெரியவர்களும் ஒன்றுக்கூடி, சமாதானக் கூட்டங்கள் நடத்தி, இரு தரப்பையுமே ஒற்றுமைப்படுத்துகிறோம். ஆனாலும் கட்சி ஆதாயம், ஜாதி ஆதாயம், பண ஆதாயம் ஆகிய மூன்று காரணங்களுக்காக இளைஞர்களைத் தவறாகப் பயன்படுத்தும் சிலரின் தொடர்ந்த செயல்பாடுகள், எங்களது முன்னெடுப்புகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைதான் இரண்டு ஊர்களுக்கிடையே நிலவுகிறது" என்றார். 

இரண்டு ஊர் மக்களும் பயப்படுவதுபோல, பெரிதாக மோதல் வெடிக்கும் முன், மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் துரிதமாகச் செயல்பட்டு, நடவடிக்கை எடுத்தால் நல்லது.