வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (06/12/2017)

கடைசி தொடர்பு:11:20 (06/12/2017)

ஆர்.கே.நகரில் இன்னும் 5,117 போலி வாக்காளர்கள் நீக்கப்படவில்லை! உயர் நீதிமன்றத்தில் மருதுகணேஷ் முறையீடு

ஆர்.கே.நகர் தொகுதியில் இன்னும் 5,117 போலி வாக்காளர்கள் நீக்கப்படவில்லை என்று தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று முடிவடைந்தது. நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிப்பால் நள்ளிரவு வரை ஆர்.கே.நகர் தொகுதி பரபரப்புடன் காணப்பட்டது. முன்னதாக தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருதுகணேஷ், ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றும் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இதனால் போலி வாக்காளர்களை நீக்க ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து 45 ஆயிரம் போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியது. இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் இன்றும் 5,117 போலி வாக்காளர்கள் நீக்கப்படவில்லை என்று தி.மு.க வேட்பாாளர் மருதுகணேஷ் சார்பில்  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பு இன்று முறையிடப்பட்டது. இதையடுத்து, இந்த முறையீட்டை மனுவாகத் தாக்கல்செய்ய அறிவுறுத்தப்பட்டதோடு, வேறு அமர்வு நாளை விசாரிக்க உத்தரவிட்டது.