வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (06/12/2017)

கடைசி தொடர்பு:11:47 (06/12/2017)

'மிகப் பெரிய தீங்காக முடியும்'- விஷாலுக்கு ஆதரவாக ஜி.ராமகிருஷ்ணன்

"விஷால் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சுயேச்சையாக செயல்படவில்லை" என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜி.ராமகிருஷ்ணன்

இதுகுறித்து ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனு செய்திருந்த விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக நள்ளிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக அந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக சொல்லப்பட்டு விஷால் தரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அதற்கு முன்னதாக விஷாலின் பெயரை முன்மொழிந்தவர்களின் இருவர் தங்களுடைய முன்மொழிவை திரும்பப் பெற்றுவிட்டதால், அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இப்படி நிராகரிப்பு, ஏற்பு, நிராகரிப்பு என எந்தவிதமான நிலைப்பாடும் அற்று தேர்தல் ஆணையம் செயல்பட்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் மீது கடும் நிர்ப்பந்தம் செலுத்தப்பட்டிருப்பதையே காட்டுகிறது. தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நிலைப்பாடுகள் ஆணையத்தின் மீதான நம்பிக்கையையும், மரியாதையையும் சீர்குலைத்துவிடும். தேர்தல் வெறும் கண்துடைப்பு என்கிற எண்ணத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். இது ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய தீங்காக முடியும். 

எனவே நிராகரிப்பு, ஏற்பு, நிராகரிப்பு என்கிற மாறுபட்ட நிலைப்பாடுகள் விஷால் வேட்புமனுவை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு ஆகியவைகுறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.