வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (06/12/2017)

கடைசி தொடர்பு:12:53 (06/12/2017)

அதிகாரிகள் துணையுடன் இரவு பகலாக நடக்கும் செம்மண் கடத்தல்!

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியப் பகுதிகளில் செம்மண் கடத்தல் தடையின்றி அமோகமாக நடைபெற்றுவருவதாக, பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா பகுதிகளான தோகைமலை, பொருந்தலூர், நாகனூர், கல்லடை, பாதிரிப்பட்டி, வடசேரி, கழுகூர், புழுநேரி, பில்லூர், கள்ளை உள்ளிட்ட பகுதிகளில் செம்மண், கிராவல் மண், ஆற்றுவாரி மணல், சரளை, ஜல்லி மற்றும் காவிரி ஆற்று மணலைத் திருடி, பதுக்கிவைத்து, லாரி, டிராக்டர்கள் போன்ற வாகனங்கள் மூலம் கரூர், திருச்சி போன்ற மாவட்டங்களுக்கு கடத்தப்படுவதாகப் புகார் வாசிக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

அவர்களிடம் பேசினோம். "வருவாய்த்துறை அதிகாரிகள் துணையுடன், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இந்தப் பகுதியில் மண் கடத்தல் நடக்கிறது. இதனால், நாங்களும் மாட்டுவண்டி உரிமையாளர்களும் கலெக்டர் கோவிந்தராஜ், டி.ஆர்.ஓ சூரியபிரகாஷ், குளித்தலை ஆர்.டி.ஓ விமல்ராஜ், திருச்சி சரக டி.ஐ.ஜி பவானீஸ்வரி போன்ற அதிகாரிகளிடம் புகார் செஞ்சோம். இந்நிலையில், வடசேரி பஞ்சாயத்தில் உள்ள தென்னகர் பகுதியில், 50 ஏக்கர் அளவில் உள்ள தனியார் இடத்தில், கடந்த இரண்டு மாதங்களாக இரவு பகலாக ஜே.சி.பி இயந்திரம்மூலம் செம்மண்ணை முறைகேடாக அள்ளி லாரி, டிராக்டர்களில் கடத்தப்படுகிறது.

அரசு விதித்த விதிகளை மீறி, 10 அடி ஆழத்துக்கு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள செம்மண் கடத்தப்பட்டுள்ளது. ஆனால், தோகைமலை ஆர்.ஐ வெங்கடேசனும் வடசேரி வி.ஏ.ஓ அண்ணாத்துரை உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள், 'இங்கு மண் கடத்தல் எதுவும் நடக்கவில்லை' என மாவட்ட நிர்வாகத்துக்குத் தவறான தகவல்களை அளித்துள்ளனர். அதனால், உடனே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்தப் பகுதியில் நடக்கும் மண் கடத்தலை உடனே தடுப்பதுடன், தவறான தகவல்களை வழங்கி, மண் கடத்துபவர்களுக்குத் துணைபோன வருவாய்த்துறை அதிகாரிகள்மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இல்லையென்றால், போராட்டம் வெடிக்கும்" என்றார்கள் ஆக்ரோஷமாக.