சென்னைப் புத்தகக் காட்சி! பபாசி தேர்தல் தொடங்கியது

தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம்-பபாசியின் வருடாந்தர சென்னைப் புத்தகக் காட்சியின் பூர்வாங்கப் பணிகள் தொடங்கியுள்ளன. பபாசியின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்தல், சென்னையில் இன்று காலை தொடங்கி பரபரப்பாக நடந்துவருகிறது. எழும்பூர் தமிழ் வளர்ச்சித்துறை வளாகத்தில் உள்ள நிரந்தரப் புத்தகக் காட்சிக்கான பபாசியின் பிரதிநிதிகளும் இதில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

book fair

கடந்த 4 ஆண்டுகளாகச் சங்கத்தின் தலைவராக காந்தி கண்ணதாசனும் செயலாளராக புகழேந்தியும் பொருளாளராக ஒளிவண்ணனும்  செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு கடந்த அக்டோபர் 5-ம் தேதி நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. அதில் தேர்தல் நடத்தும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. தேர்தல் குழுவில் அகிலன் கண்ணன், அமர்ஜோதி, வானதி ராமநாதன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில் குமரன் பதிப்பகம் வைரவன் தலைவராகவும் அரு.வெங்கடாசலம் செயலாளராகவும் ஒர் அணியில் போட்டியிடுகின்றனர். மற்றொரு அணியில் சந்தியா பதிப்பகம் செளந்தரராஜனும் செயலாளராக ஷாஜகானும் போட்டியிடுகின்றனர். மேலும், செயற்குழுவுக்குத் தமிழிலிருந்து 4 பேரும் ஆங்கிலத்திலிருந்து 4 பேரும் எழும்பூர் நிரந்தரப் புத்தகக் காட்சி பிரதிநிதிகளாகத் தமிழ் , ஆங்கிலத்திலிருந்து தலா இரண்டு பேர் என மொத்தம் 20 பேர் தேர்தெடுக்கப்படவுள்ளனர். சவேரா ஹோட்டலில் நடைபெற்றுவரும் வாக்குப்பதிவின் முடிவுகள், இன்று மாலையே வெளியிடப்படும். இந்தத் தேர்தலில், பபாசி சங்கத்தில் உள்ள 472 உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் . 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!