வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (06/12/2017)

கடைசி தொடர்பு:12:37 (06/12/2017)

சென்னையின் இந்தப் புராதன ‘கன்னி’க்கு வயது 120

சென்னையின் பெருமைகளில் ஒன்று கன்னிமாரா நூலகம். 1896-ல் திறக்கப்பட்ட இந்தியாவின் பெருமைமிகு நூலகமான இந்த நூலகத்துக்கு இன்று 120-வது பிறந்தநாள். 

ஆங்கிலேயர் ஆட்சியின்போது, 1860-ல் கேப்டன் ஜான் மிட்செல் என்பவர், மதராஸ் அருங்காட்சியகத்துடன் இணைந்து ஒரு சிறு நூலகத்தை நிறுவினார். இங்கிலாந்தில் உள்ள எயில்பேரி கல்லூரி நூலகத்தில் தேவைக்கு அதிகமாக இருந்த புத்தகங்கள் இந்த அருங்காட்சியகத்துக்குக் கொண்டுவரப்பட்டன. பின்னர் ஒரு பெரிய நூலகம் கட்ட வேண்டும் என்று முடிவுசெய்தனர். அப்படி எழுந்ததுதான் கன்னிமாரா நூலகம்.

கன்னிமாரா - சென்னை

1890-ம் ஆண்டு மார்ச் 22-ல் அடிக்கல் நாட்டப்பட்டு ஆறு வருடங்களில் இந்த நூலகம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த நூலகத்துக்கு அடிக்கல் நாட்டியவர் மதராஸ் மாகாண ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு. எனவே, நூலகத்துக்கும் அவரது பெயரே வைக்கப்பட்டது. கட்டடங்கள் எல்லாம் பர்மா தேக்கால் கட்டப்பட்டவை. கண்ணாடிகள் பெல்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. நூலகத்தின் கட்டடத்தை நம்பெருமாள் செட்டி குழுமம் கட்டித்தந்தது.

கன்னிமாரா

இரு கழுகுகள் பாம்பைக் கொத்திப் பறப்பதுபோல இருந்த ஆங்கிலேய அடையாளம்தான் இந்த நூலகத்தின் முகப்பில் பொறிக்கப்பட்டிருந்தது. விடுதலைக்குப் பின் அசோக சிங்கம் பொறிக்கப்பட்டது. தமிழின் மிகப் பழைமையான அச்சு நூலின் பிரதியான 1560-ல் அச்சிடப்பட்ட பைபிள், 1553-ல் வெளியான லத்தீன் மருத்துவ நூல், 1852-ல் எழுதப்பட்ட தேம்பாவணியின் இரண்டாம் பாகம், 1578-ல் வெளியான பிளாட்டோவின் நூல், 1886-ல் வெளியான இந்திய வானிலை அறிக்கையின் தொகுப்பு ஆகியவை இங்குள்ள பழைமையான நூல்கள். 1861-ல்  வெளியான உலக அட்லஸ்தான்  இருப்பதிலேயே பழைய புத்தகம்.

இந்தியப் பதிப்பகங்களில் இருந்து வெளியாகும் அனைத்துப் புத்தகங்களின் நகல்களைப் பெறும் நான்கு முக்கியமான நூலகங்களில் இதுவும் ஒன்று. தமிழில் வெளியான முதல் நூலின் நகலைக் கொண்டது, முதல் அட்லஸ் உள்பட பழைமையான நூல்களை உள்ளடக்கியது என, சென்னை கன்னிமாரா நூலகம் பல சிறப்புகளைக் கொண்டது. அதுவும் பழைமையான நூல்கள் பாதுகாக்கப்பட்டு வரும் இந்தப் 'புத்தகக் காப்புப் பிரிவு’  கன்னிமாராவுக்குப் பெருமை சேர்க்கக்கூடியது' ஐக்கிய நாடுகளின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகவும் இது விளங்கிவருகிறது.

கன்னிமாரா

கன்னிமாராவில் கிட்டத்தட்ட ஆறு லட்சம் புத்தகங்கள் உள்ளன. அதில் 'புத்தகக் காப்புப் பிரிவு’ பகுதியில் மட்டும் ஒரு லட்சம் புத்தகங்கள் பராமரிக்கப்படுகின்றன. பல்வேறு மொழிகளில் இந்தியா முழுவதும் வெளிவரும் நாளிதழ்கள் இங்கு கிடைக்கும். பெரும்பாலான வாசகர்கள் பழைய தமிழ், ஆங்கில நாளிதழ்களைத் தேடி வருவார்கள் என்பதால் ஐந்து ஆண்டுகள் வரையான நாளிதழ்களை மாத வாரியாகப் பிரித்துவைத்து பாதுகாக்கிறார்கள். மேலும், தொடக்கத்தில் இருந்து இன்றுவரை தமிழக சட்டமன்ற, நாடாளுமன்ற விவாதங்களின் தொகுப்புகள் உள்ளன. இதைத் தவிர வேறு எங்கும் கிடைக்காத பழைமையான நூல்கள் உள்ளன.

''கன்னிமாராவில் அறிஞர் அண்ணா படிக்காத புத்தகங்களே இல்லை’ என்பார்கள். அவர் அன்று அமர்ந்து படித்த இருக்கையை இன்றும் பாதுகாத்து வருகிறார்கள். அதேபோல் வி.வி.கிரி, முன்னாள் முதல்வர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் என்று பலரும் இங்கு வந்து வாசித்திருக்கிறார்கள். இன்னமும் வாசிக்கிறார்கள்!


டிரெண்டிங் @ விகடன்