'விஷால் வெளியிட்ட ஆடியோகுறித்து விசாரிக்க வேண்டும்'- போலீஸ் கமிஷனரிடம் சமூக ஆர்வலர் புகார்

 'விஷால் வெளியிட்ட ஆடியோகுறித்து காவல்துறை விசாரிக்க வேண்டும்' என்று சமூக ஆர்வலர் தேவராஜன் தெரிவித்தார்.

சென்னை செம்பியத்தைச் சேர்ந்தவர் தேவராஜன். இவர், விஷாலுக்கு ஆதரவாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியடுவதற்காக, நடிகர் விஷால் மனுத் தாக்கல் செய்தார். விஷாலை வேட்பாளராக முன்மொழிந்தவர்களில் 2 பேரின் கையெழுத்து தங்களுடையது அல்ல என்று பின்வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்துக்குப் பின்னணியில் முன்மொழிந்தவர்களில் இருவரை அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனின் ஆதரவாளர்கள் மிரட்டியதாக ஒரு ஆடியோவை விஷால் வெளியிட்டார். அந்த ஆடியோவின் உண்மைத் தன்மை அறியப்பட வேண்டும். மேலும், மிரட்டப்பட்டது உண்மை என்று தெரியவந்தால், காவல்துறை தன் கடமையைச் செய்ய வேண்டும். மேலும், தன்னுடைய மனுவை ஏற்க வலியுறுத்தி அனுமதி இன்றி நடிகர் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது.

ஆர்.கே.நகர் தேர்தல் சுதந்திரமாக மற்றும் நியாயமாக நடத்தப்பட வேண்டும். நடிகர் விஷால் வெளியிட்ட ஆடியோமூலம் ஆள்கடத்தல், மிரட்டல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. இத்தகைய சட்ட விரோதச் செயல்களால் வாக்காளர்கள் மிரளவும், குழப்பம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில், வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமூகசேவகர் தேவராஜன், விஷாலுக்கு எதிராக நேற்று மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!