வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (06/12/2017)

கடைசி தொடர்பு:14:10 (06/12/2017)

``ஆளுங்கட்சி கோடிகளைக் கொட்டினாலும் தி.மு.க-வுக்குதான் வெற்றி”: வைகோ

``ஆர்.கே,நகர் இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியினர் கோடிகளைக் கொண்டுவந்து கொட்டினாலும், தி.மு.க-வுக்குதான் வெற்றி” என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

வைகோ

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை இரண்டு முறை வெற்றிபெறச் செய்து, அரியாசனத்தில் அமரவைத்த தொகுதி, ஆர்.கே நகர். அவரது மறைவால் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தலை அறிவித்தது, தேர்தல் ஆணையம். தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பாக வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, அந்தத் தேர்தலை ரத்துசெய்தது தேர்தல் ஆணையம். 

இந்த நிலையில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதுகுறித்து இன்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர் மீண்டும் பணப் பட்டுவாடாவில் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன. ஆளுங்கட்சியினர் இந்தத் தேர்தலில் எத்தனை கோடிகளைக் கொட்டிக்கொடுத்தாலும், தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ்தான் வெற்றி பெறுவார். தி.மு.க-வின் வெற்றிக்கு ம.தி.மு.க பாடுபடும்” எனக் கூறியுள்ளார்.