வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (06/12/2017)

கடைசி தொடர்பு:13:48 (06/12/2017)

`நீதி கிடைக்கும் என நம்புகிறேன்' - பிரதமரிடம் நியாயம் கேட்கும் விஷால்

'ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன்' என்று பிரதமருக்கு விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு, வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் சுயேச்சைகளும் போட்டியிடுகின்றன. மொத்தம் 131 வேட்பாளர்கள் சார்பாக 145 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள்மீதான பரிசீலனை, தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது, மனுத்தாக்கல் செய்த அனைத்து வேட்பாளர்களும் இருந்தனர்.

விஷாலின் மனுவைப் பரிசீலனை செய்தபோது, சுயேச்சை வேட்பாளர்கள் தினேஷ், பிரேம்குமார் உள்ளிட்டவர்கள், விஷாலின் வேட்பு மனுவில் முன்மொழியப்பட்டவர்களின் கையெழுத்து போலியானவை என்றும், அவர் மீதான வழக்கு தொடர்பான விவரத்தைக் குறிப்பிடவில்லை என்றும் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்கள் சரியாகக் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்ததோடு, விஷாலின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து, மனுவை ஆய்வுசெய்த தேர்தல் அதிகாரி வேலுச்சாமி, விஷாலின் மனுவை நிறுத்திவைப்பதாக அறிவித்தார். பின்னர், மாலை விஷாலின் மனு மீண்டும் பரிசீலனை செய்யப்பட்டது. அப்போது, திடீரென விஷால் மனுவில் முன்மொழியப்பட்ட சுமதி, தீபன், கார்த்திகேயன் ஆகிய மூன்று பேர் தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்கு வந்தனர். அப்போது, "நாங்கள் மனம் உவந்து மனுவை முன்மொழியவில்லை. மனுவில் போலியாக எங்கள் பெயர் போடப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தனர். இதையடுத்து, விஷாலின் மனுவை நிராகரிப்பதாகத் தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷால் மறியல்செய்தார். காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர், விஷால் மீண்டும் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டார். மேலும், தன்னிடம் இருந்த ஆதாரத்தை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல்செய்தார். அதன் அடிப்படையில் மனுவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, தனது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக விஷால் தெரிவித்தார்.

ஆனால், இரவு 11 மணிக்கு விஷால் மனு நிராகரிக்கப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அதிகாரபூர்வமாக அறிவித்தார். "முன்மொழிவோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 145 வேட்பு மனுக்களில் 72 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 73 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி தெரிவித்தார். விஷால் மனு தொடர்பாக, ஆர்.கே.நகர் தொகுதி நேற்றிரவு 11 மணி வரை களேபரமாக இருந்தது.

இதனிடையே, விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு தேர்தல் அதிகாரிமீது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில், தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோருக்கு ட்விட்டர் மூலம் விஷால் கோரிக்கை வைத்துள்ளார். இருவருடைய ட்விட்டர் கணக்கை டேக் செய்து கருத்து தெரிவித்துள்ள விஷால், "ஆர்.கே.நகர் தொகுதியில் எனது வேட்பு மனு ஏற்கப்பட்டு, பின்னர் நிராகரிக்கப்பட்டது என்பது நீதிக்குப் புறம்பானது. இடைத்தேர்தலில் என்ன நடக்கிறது என்பது தங்களுக்குத் தெரியும் என நம்புகிறேன். வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.