ஒகி புயல் - மத்திய மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு!

'கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்கக்கோரிய வழக்கில், மத்திய மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும்' என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


ஒகி புயலின் தாக்கத்தால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாத சூழல் உள்ளது. இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த ராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், 'கடந்த வாரம் ஒகி புயல் பாதிப்பால் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, ஏராளமான மரங்கள் சாய்ந்து மின்தடையும் ஏற்பட்டது.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்பட்டது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் நிலை என்ன ஆனது? என இதுவரை தெரியவில்லை. எனவே, இதை தேசிய பேரிடர் பாதிப்பாக மத்திய அரசு அறிவிக்க உத்தரவிட வேண்டும். மேலும், புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்ச ரூபாயும் காயம் அடைந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய், படகுகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்க மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு, இன்று நீதிபதிகள் வேணுகோபால், தாரணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். வழக்கை, வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!