வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (06/12/2017)

கடைசி தொடர்பு:15:30 (06/12/2017)

பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம்! பெண் வி.ஏ.ஓ-வை சிக்கவைத்த 3 ஆயிரம் ரூபாய்

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் வி.ஏ.ஒ-வாக பணியாற்றிவரும் சுமதி என்ற பெண்மணி, ஜெய்கணேஷ் என்பவரிடமிருந்து லஞ்சம் பெற்றபோது ஊழல் தடுப்பு கண்காணிப்புப் போலீஸார் கையும் களவுமாக பிடித்துக் கைதுசெய்தனர்.

செங்கிப்பட்டியைச் சேர்ந்த ஜெய்கணேஷ் புதிதாக வாங்கிய தனது நிலத்துக்குப் பட்டா பெயர் மாற்றம் செய்யக்கோரி, வி.ஏ.ஒ சுமதியிடம் மனு கொடுத்திருக்கிறார். இதற்கு வி.ஏ.ஒ 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெய்கணேஷ் தஞ்சாவூர் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் போலீஸாரிடம் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார். காவல்துறையினரின் அறிவுறுத்தலின்பேரில் வி.ஏ.ஒ அலுவலகத்துக்குச் சென்ற ஜெய்கணேஷ், ரசாயனம் தடவிய பணத்தை வி.ஏ.ஒ சுமதியிடம் கொடுத்திருக்கிறார். அப்பொழுது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீஸார் சுமதியைக் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம், லஞ்சம் வாங்கும் மற்ற வி.ஏ.ஒ-க்கள் வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கியிருக்கிறது. லஞ்ச லாவண்ய வி.ஏ.ஒ-க்கள் மீதான வேட்டை மேலும் தொடரும் என்கிறார்கள் ஊழல் தடுப்பு போலீஸார்.