வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (06/12/2017)

கடைசி தொடர்பு:16:34 (12/07/2018)

"இதுதான் மழைநீர் சேகரிப்புங்களா?"- மக்களின் கேள்விக்கு அதிகாரிகளின் அலட்சியப் பதில்

"மழைநீர் சேகரிப்புனா எப்படி இருக்கும்னு இதுநாள்வரை தெரியாமல் குழம்பிப் போயிருந்தோம். இப்படி தரையில் மழைநீரை எங்குட்டும் போகவிடாம பிளாஸ்டிக் குப்பைகள் மேல தேக்குறதுதான் மழைநீர் சேகரிப்புங்களா?. அடி ஆத்தாடி!" என்று அப்பாவியாக அதிகாரிகளைக் கேட்கிறார்கள் குளித்தலை மக்கள்.

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் இருக்கும் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், பல மாதங்களாக இந்த அமைப்பு செயல்படவில்லை. மழைநீர் பூமிக்குள் போகும் வழி, குப்பைகளால் அடைக்கப்பட்டிருக்கிறது. அதனால், தற்போது சில நாள்களாக குளித்தலையில் அதிக அளவு மழை பெய்ததால், மழைநீர் சேமிப்பு அமைப்பு வழியாக பூமிக்குள் போகவில்லை. மாறாக..?

அந்தக் கொடுமையைச் சொல்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள், "கட்டடங்களுக்கு இடையில் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்மீது மழைநீர் பூமிக்குள் போகாமல் அப்படியே தேங்கி நிற்கிறது. மழை நின்று இரண்டு நாள்கள் கடந்தும், அந்த மழைநீர் அப்படியே தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் அங்கே உற்பத்தி ஆகின்றன. டெங்கு கொசுவும் உற்பத்தி ஆகுது. மனு கொடுக்க இங்கே வரும் மக்களை கொசுக்கள் கடிக்கிறது. இதனால், மக்களுக்கு மர்மக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் வர அதிக வாய்ப்பிருக்கு. 'இப்படி மழைநீர் சேகரிப்பு அமைப்பைச் சரி பண்ணாமப் போட்டிருக்கீங்களே, சீக்கிரம் சரி பண்ணுங்க'ன்னு அதிகாரிகளைப் பார்த்துக் கேட்டோம்.

அதுக்கு அவங்க, 'எங்களுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? எங்களுக்கு மக்கள் தர்ற கோரிக்கை மனுக்களைச் சரிபண்ணி அனுப்பவே நேரம் போதலை. இந்த லட்சணத்துல, மழைநீர் சேகரிப்பு அமைப்பை சரிபண்ண எங்களுக்கு ஏது நேரம்?'னு அலட்சியமாகப் பதில் சொல்றாங்க. 'வீட்டுக்கு வீடு மழைநீரை சேகரிப்பீர்'னு அங்கங்கே அரசாங்கம் மக்களுக்கு விழிப்பு உணர்வு விளம்பரம் பண்ணுது. ஆனால், மழைநீர் சேகரிப்பின் அரசோட முயற்சியே இந்த லட்சணத்துலதான் இருக்கு. இதுல ஊருக்கு உபதேசம் வேறு. என்ன அரசாங்கமோ போங்க.." என்று சலித்துக்கொண்டார்கள்.