வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (06/12/2017)

கடைசி தொடர்பு:16:59 (06/12/2017)

'ரெட்டக்கொம்பை காணோம்'- அவசர கதியில் வைக்கப்பட்ட 'புதுக்கோட்டை' பெயர் பலகை

புதுக்கோட்டை ரயில் நிலையத்தின் பிரதான வாயிலில், இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, அவசர அவசரமாக பிரதான வாயிலில் புதுக்கோட்டை என்று பெயர் வைப்பதற்குப் பதிலாக புதுக்காட்டை என்று வைக்கப்பட்டுள்ளது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"புதுக்கோட்டை  ரயில் நிலையம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறதா?" என்ற தலைப்பில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்  அதில், 'சில மாதங்களுக்கு முன்பு 'புதுக்கோட்டை ரயில் நிலையம்' என்று முகப்பில் பிரதானமாகக் காணப்பட்ட  பெயரை இப்போது காணவில்லை. அந்த இடத்தில் தற்போது பளபளவென்று இந்தி வாசகங்கள் காணப்படுகின்றன.

நீண்ட கட்டடத்தின் முகப்பில், ஆங்கிலம், தமிழ், இந்தி என்று வரிசையாக இருந்த ரயில்வே நிலையப் பெயரில் மாற்றம் செய்யப்பட் டிருக்கிறது. அதாவது, தமிழ்ப் பெயர் இருந்த பிரதான நுழைவாயிலில், இப்போது இந்தி வந்து குந்திவிட்டது. இந்தி இருந்த இடத்துக்கு தமிழைத் தள்ளிவிட்டார்கள்' என்று குறிப்பிட்டிருந்தோம். அந்தச் செய்தி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

‎இதைத் தொடர்ந்து விழித்துக்கொண்ட ரயில்வே நிர்வாகம், இன்று காலை நிலையக் கட்டடத்தின் பிரதான முகப்பில் பழையபடி தமிழ்ப் பெயரை வைத்தது. ஆனால், அந்தக் காரியத்தையும் உருப்படியாகச் செய்யவில்லை. புதுக்கோட்டை என்பது இப்போது 'புதுக்காட்டை' என்று தெரிகிறது.