'எங்கள் கடல் வளம் அழிக்கப்படுகிறது'- இலங்கைத் தமிழ் எம்.பி-யின் பேச்சுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழக மீனவர்கள்! | Tamil Nadu fishermen condemned Srilankan MP's speech

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (06/12/2017)

கடைசி தொடர்பு:16:30 (06/12/2017)

'எங்கள் கடல் வளம் அழிக்கப்படுகிறது'- இலங்கைத் தமிழ் எம்.பி-யின் பேச்சுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழக மீனவர்கள்!

தமிழக மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ் எம்.பி பேச்சு

தமிழக மீனவர்களுக்கு எதிராக, இலங்கையின் வடக்கு மாகாண எம்.பி., சரவணபவன், இலங்கை  நாடாளுமன்றத்தில் போர்க்கொடி தூக்கியிருப்பதற்கு, தமிழக மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய இலங்கையின் வடக்கு மாகாண தமிழ் எம்.பி., சரவணபவன், ''இந்தியக் கடலோரத்தில் இழுவை மீன்பிடி வலை பயன்படுத்தப்பட்டதனால், ஒட்டுமொத்த கடல் வளமும் அழிக்கப்பட்டு மீன்களே இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனால், மீன்கள் அதிகமுள்ள எமது கடல்பரப்பை நோக்கி அவர்கள் படை எடுக்கிறார்கள். இதனால், யாழ்ப்பாணம் பகுதி மீனவர்களே இந்திய இழுவை மடி மீனவர்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தமது வளங்களை அழித்துவிட்டு, எமது கடல் வளங்களைச் சூறையாடிச் செல்வது மாத்திரம் அல்லாமல், எமது கடல் வளங்களையும் அழிக்கிறார்கள். அவர்கள், ஒரு கிலோ மீன் பிடிப்பதற்காக சுமார் 18 கிலோ உற்பத்தி ஆகக்கூடிய மீன் குஞ்சுளை அழிக்கிறார்கள்.

இந்திய மீனவர்கள், ஆண்டு ஒன்றுக்கு 500 பில்லியன் ரூபாய் மதிப்புடைய வளங்களை இலங்கைப் பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து அள்ளிச் செல்கிறார்கள். இந்தியா ஏற்றுமதிசெய்யும் மீன்களில், 40 சதவிகிதம் எமது வடக்குக் கடலில் பிடிபட்டவைதான் என கூறப்படுகிறது. இது உங்களுக்கு ஆச்சர்யமளிக்கும் தகவல் என்றாலும் இதுதான் உண்மை. இந்திய மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க அரசு தயங்கியது. எமது வடக்குப் பகுதி மீனவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக, அவர்களது படகுகள் பிடித்து வைக்கப்படுகின்றன. இதனால், சுமார் 5 சதவிகித வருகை குறைந்துள்ளது. விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னால் பாதுகாப்புத்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும். கடற்படைக்கு அதி நவீன கப்பல்கள் வாங்கப்பட்டுள்ள நிலையில் இந்திய மீனவர்களின் வருகையை ஏன் தடுக்க முடியவில்லை. இந்திய அரசுடன் பகைக்கக்கூடாது என்பதற்காகவோ அல்லது பாதிக்கப்படுவது எமது வடக்கு தமிழ் மீனவர்கள் என்பதாலோ பாரபட்சம் காட்டப்படுகின்றதோ என ஐயப்பாடுகொள்ள வேண்டியிருக்கிறது.

2010-ம் ஆண்டிலிருந்து அத்துமீறல் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. இழுவை மடியில் மீன் பிடிப்பில் ஈடுபட்டால், சிறைத் தண்டனை என அறிவிக்கப்பட்டும் ஏன் அவர்களை சிறை வைக்கவில்லை. இப்போதும் மீனவர்கள் விடுதலையாகிக்கொண்டுதானே இருக்கிறார்கள். இலங்கைக் கடற்பரப்பில் எல்லை தாண்டும்  இந்திய மீனவர்களுக்குத் தண்டனை கடுமையாக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும். கடுமையான தண்டனை அளிப்பதன்மூலமே, அவர்களது வருகையைக் கட்டுப்படுத்த முடியும்'' என்று பேசியுள்ளார்.

இலங்கையின் வடக்கு மாகாண எம்.பி., சரவணபவன் நாடாளுமன்றத்தில் பேசிய இந்தப் பேச்சுக்கு, தமிழக மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காலங்காலமாக பாரம்பர்யமாக மீன்பிடித்துவரும் பகுதிகளிலேயே தாங்கள் ஈடுபட்டுவருவதாகவும், இலங்கை அரசுதான் இழுவை மடிக்குத் தடை விதித்துள்ளது. இந்தியாவில் தடை விதிக்கப்படவில்லை. எனவே, எங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ள இலங்கை எம்.பி., தனது கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


[X] Close

[X] Close