காணாமல்போன கழிவுநீர் கால்வாய்! ஒரு மழையால் வீணான 10 லட்சம் ரூபாய்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஒத்தக்கடையிலிருந்து கைக்குடி குளக்கால் வரைக்கும் சாலையின் இருபுறமும் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயைக் காணவில்லையென அங்குள்ள தே.மு.தி.க ஒன்றியச் செயலாளர் ஆசைத்தம்பி, தேவகோட்டை நகராட்சி ஆணையாளருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் மனு ஒன்றை அனுப்பியிருக்கிறார். அந்த மனுவில், ``கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேவகோட்டை ஒத்தக்கடை பகுதியான வட்டான ரோட்டிலிருந்து இறகுசேரி கண்மாய்க்குப் பக்கத்தில் உள்ள குளக்காலில் கழிவு நீர்கள் கலப்பதற்காகச் சுமார் 300 மீட்டர் நீளமுள்ள கால்வாய் 10 லட்சம் மதிப்பீடு தயார் செய்து நகராட்சி ஆணையாளர் யாருக்குமே தெரியாமல் ரகசியமாக தர்மராஜ் என்பவருக்கு கான்ட்ராக்ட் கொடுத்து அந்தக் கால்வாயைக் கட்டியிருக்கிறார்.

drainage
 

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் காணாமல் போய்விட்டது. அதோடு இரவோடு இரவாக நகராட்சி கமிஷனரும் கான்ட்ராக்டரும் சேர்ந்து கால்வாய் கட்டிய சுவடு தெரியாமல் ஜே.சி.பி வைத்து மீதம் கிடந்த கற்களை வழித்து அள்ளிவிட்டார்கள். இவர்கள் கட்டிய சிறிய பாலங்கள் மீதமுள்ள கழிவுநீர் கால்வாய்கள் எப்படி கட்டியிருப்பார்கள் என்கிற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. நகராட்சி கமிஷனர் அதிகமாக யார் லஞ்சம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே வேலைகளை வழங்குகிறார். இவரால் தான் இப்படி தரமற்ற கால்வாய்கள், கட்டடங்கள், சாலைகள் போடப்படுகின்றன. எனவே, கமிஷனர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் புகார் குறித்து ஆசைத்தம்பியிடம் பேசியபோது, ''இந்தக் கால்வாய்க்கு யார் குவாலிட்டி சான்றிதழ் வழங்கியது என்று தெரியவில்லை. சென்ட்ரிங் போட்டு சரியான அளவுக்கு சிமென்ட் போட்டு கட்டினார்களா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே, கான்ட்ராக்டர் மற்றும் நகராட்சி கமிஷனர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். எனவே, இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேவகோட்டையின் இதயமான பகுதி ஒத்தக்கடை. புதிதாகக் கட்டப்பட்ட கால்வாயைச் சுற்றி பெரிய மாட்டுச்சந்தை, ஆரம்ப சுகாதார நிலையம், அரசுப் பள்ளிக்கூடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோயில்கள் என இருக்கின்றன. அதே நேரத்தில் சுத்துப்பட்டு கிராம மக்கள் அதிகளவில் கூடும் பகுதி இது. இப்படிப்பட்ட இடத்தில் போலியான சாக்கடையைக் கட்டி இயற்கை அவர்களின் சாயத்தைப் போக்கியிருக்கிறது. ஒப்பந்ததாரர், அதிகாரிகள்மீது நடவடிக்கை இல்லையென்றால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'' என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!