விஜயகாந்த் மீதான பிடிவாரன்ட் ரத்து!

செய்தியாளரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் மீதான பிடிவாரன்டை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

சென்னை விமான நிலையத்தில் தனியார் பத்திரிகையின் செய்தியாளர் பாலு என்பவரை, கடந்த 2013-ல் தாக்கியதாகத் தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு சென்னை ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை கடந்த முறை நடந்தபோது, விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது விஜயகாந்த் ஆஜராகவில்லை. பலமுறை சம்மன் அனுப்பியும் விஜயகாந்த் நேரில் ஆஜராகவில்லை என்பதால், விஜயகாந்துக்குப் பிடிவாரன்ட் பிறப்பித்து ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக விஜயகாந்த், கடந்த 28-ம் தேதி விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற நிலையில், அவருக்குப் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. 

இந்தநிலையில், தன் மீதான பிடிவாரன்ட் ரத்து செய்யக் கோரி விஜயகாந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. உடல் நலக்குறைவால் வெளிநாட்டில் சிகிச்சைபெற்று வருவதாகவும் அந்தக் காரணத்தால் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்றும் விஜயகாந்த் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், விஜயகாந்த் மீதான பிடிவாரன்டை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், பிடிவாரன்ட் ரத்து செய்தது தொடர்பாகச் சென்னை விமான நிலைய போலீஸாருக்குத் தகவல் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!