வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (06/12/2017)

கடைசி தொடர்பு:18:00 (06/12/2017)

`ஆசிரியர்களுக்கு புது டாய்லெட்; எங்களுக்கு நாறும் டாய்லெட்' - குமுறும் பள்ளி மாணவர்கள்

 ``எங்கள் பள்ளியில் ரீசஸ் பீரியடுல அவசரத்துக்கு ஒதுங்க பயந்துகிட்டு, தினமும் மூக்க பொத்திக்க கைக்குட்டையில சென்ட் அடிச்சுகிட்டு போறோம். அந்த அளவுக்கு மோசமா இருக்கு டாய்லெட்" என்று வேதனைப்படுகிறார்கள் லாலாப்பேட்டை அரசுப் பள்ளி மாணவர்கள்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் இருக்கிறது லாலாப்பேட்டை. இந்தக் கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால், அத்தனை மாணவர்களுக்கும் ஒரே ஒரு டாய்லெட்தான் இருக்கிறது. அதுவும், படுகேவலமாக, அருவருப்பாகப் பல நோய்களை உற்பத்தி செய்யும்விதமாக இருக்கிறது எனப் புலம்புகிறார்கள் மாணவர்கள்.

இதுகுறித்து, அவர்களிடமே மேற்கொண்டு கேட்டோம். "பல வருஷமா இந்த டாய்லெட் மோசமாதான் இருக்கு. பல இடங்களில் உடைஞ்சும் போய் இருக்கு. அதைப் பிளீச்சிங் பவுடர் அடிச்சு சுத்தப்படுத்தவோ தண்ணீர் ஊற்றி கழுவவோ யாரும் செய்யலை. நாங்களே செய்யலாம்ன்னாலும் அதற்கு தண்ணீர் வசதியும் இல்லை. ஆனால், ஆசிரியர்கள் போகும் டாய்லெட்டுகள் மட்டும் புத்தம்புதுசா சுத்தபத்தமா இருக்கு. அங்க தண்ணீர் வசதியும் இருக்கு. `இந்த டாய்லெட்டை சரி பண்ணுங்க. எங்களுக்கு அதுக்குள்ள போறதுக்கே மூக்கை அடைக்குது. அவ்வளவு நாத்தம் சார்'ன்னு தலைமை ஆசிரியர்கிட்ட பலமுறை புகார் செஞ்சுட்டோம். புண்ணியமில்லை. இந்த டாய்லெட்டுல போறதுக்கு பயந்துகிட்டு, பல மாணவர்கள் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி வெளியே ஓப்பன் பிளேஸ்ல போய்ட்டு வந்தாங்க. அதையும் கண்டுபிடித்து, அந்த மாணவர்களைக் கண்டிச்சதோடு சிலருக்கு ஃபைனும் போட்டுட்டாங்க. இதனால், பல்லைக்கடிச்சுட்டு நாங்க அந்த 'நறுமணமான' டாய்டெட்டுலேயே அவசரத்துக்கு ஒதுங்க வேண்டியிருக்கு. அந்த நாத்தத்தை சமாளிக்க நாங்க இப்போ எல்லா மாணவர்களும் கைக்குட்டையில வீட்டுலேயே சென்ட் அடிச்சு எடுத்துட்டு வந்து, டாய்லெட்டுக்குள்ள போறப்ப மட்டும் அந்த கர்ச்சீப்பை மூக்குல பொத்திக்கிட்டு போறோம். இத சரிபண்ணலன்னா, கிளாஸ்களைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்த இருக்கிறோம்" என்றார்கள் கோபமாக!