வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (06/12/2017)

கடைசி தொடர்பு:17:45 (06/12/2017)

பச்சிளம் குழந்தையைக் காப்பாற்றிய பிச்சைக்காரர்! குவிந்த பாராட்டுகள்

அரியலூரில், பிறந்து ஒரு நாளான பச்சிளம் ஆண் குழந்தையைத் தாயார் கோயிலில் போட்டுவிட்டு சென்றுள்ளார். குழந்தையைச் சுற்றி வட்டமடித்துக்கொண்டிருந்த நாய்களிடமிருந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் காப்பாற்றியிருக்கிறார். அவருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. அந்தக் கோயிலின் அருகில் உள்ள கடையின் பின்புறத்தில் வெகுநேரமாக ஒரு குழந்தை அழுகுரல் சத்தம் கேட்டுக்கொண்டிருக்க, கோயிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த முதியவர் ஒருவர், குழந்தையின் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று போய்ப் பார்த்திருக்கிறார். அப்போது, பிறந்து ஒரு நாள் ஆன ஆண் குழந்தையைத் துணியில் சுத்தி குப்பைத் தொட்டியின் அருகில் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். குழந்தையைச் சுற்றி நாய்கள் குரைத்துக்கொண்டிருந்தைப் பார்த்ததும் பதறிப்போன  முதியவர், நாய்களை அங்கிருந்து விரட்டி அடித்து குழந்தையைத் தூக்கி வந்திருக்கிறார். பிச்சை எடுக்கும் முதியவரிடம் குழந்தையைப் பார்த்ததும் அக்கோயில் அருகில் கடைகள் வைத்திருக்கும் சிலர் 108 ஆம்புலன்ஸ் மற்றும் கியாரலாபாத் காவல் நிலையைத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

                          

அதன் பேரில் விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஓட்டுநர் அலக்ஸ்சாண்டர் மற்றும் மருத்துவ உதவியாளர் ராஐகோபால் ஆகியோர் குழந்தையை மீட்டு பாதுகாப்பாக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பச்சிளம் குழந்தையை மீட்டதோடு, பிரச்சைக்காரர் முதியவரை பொதுமக்களும் காவலர்களும் பாராட்டினர். இக்குழந்தையைச் சாலையோரம் வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதேபோல்,கடந்த ஆண்டு அரியலூர் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ஏரிக்கரையில் பிறந்து 7 நாள்களான பெண் குழந்தை ஒன்று உயிருடன் கண்டெடுக்கப்பட்டு தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.