வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (06/12/2017)

கடைசி தொடர்பு:18:15 (06/12/2017)

வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா! த.மு.மு.க ஆர்ப்பாட்டத்தில் முத்தரசன் பேச்சு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக இன்று டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளாகவும் மதவாத அரசியலை எதிர்த்து கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றக் கூட்டத்துக்கு யூனுஸ் அஹமத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் த.மு.மு.க மாநிலத் துணைத் தலைவர் உமர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தங்கவேலு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் காஜா உட்பட 300-க்கும் அதிகமான தொண்டர்களும் கலந்துகொண்டார்கள்.

கூட்டத்தில் பேசிய முத்தரசன், ''நாடு முழுவதும் இன்று எதிர்ப்பு தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. இங்கு பலதரப்பட்ட சாதியினரும் மதத்தினரும் வாழ்கிறோம். நம்முடைய தலைவர்கள் மதச்சார்பற்ற கொள்கைகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதைப் பின்பற்றக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். இந்தியாவைப்போல பல நாடுகள் அடிமைப்பட்டுக் கிடந்தது. விடுதலைக்காகப் போராடியவர்கள் அந்த நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, பிரதமராகவோ குடியரசு தலைவர்களாகவோ ஆனார்கள். ஆனால், இந்தியாவில் விடுதலைக்காகப் போராடிய காந்தி, பதவிகள் எதுவும் பெறாமல் மேலாடையும் செருப்பும் இல்லாமல் எளிமையாக வாழ்ந்தார். அப்படிப்பட்ட உன்னத மனிதரைச் சுதந்திரம் அடைந்து 5 மாதம் 15 நாளில் அவரைக் கொன்றுவிட்டனர்'' என்றார்.

அடுத்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தங்கவேல், ``குஜராத்தில் மதவெறியைத் தூண்டி 5,000-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று ஆட்சிக்கு வந்தார்கள். மோடி ஒரு மரண வியாபாரி'' என்றார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் துணைத் தலைவர் உமர், ''இந்தியாவின் முதல் பயங்கரவாதம் காந்தியைக் கொன்றது. ஆர்.எஸ்.எஸ் என்ற இந்து மத அமைப்பு காந்தியைக் கொன்றது. அடுத்து நாம் 450 ஆண்டுகளாகத் தொழுகை செய்துகொண்டிருந்த பாபர் மசூதியை இடித்தார்கள். பாபர் மசூதியை இடித்தது இந்தியாவின் மத நல்லிணக்கத்தை இடித்ததற்கு சமம். இதை இடித்த அத்வானி உட்பட 68 பேர் மீது மட்டுமல்லாமல் இதற்குப் பின்னாடி இருந்த 1000-த்துக்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும். பாபர் மசூதியை இஸ்லாமியர்கள் வசம் கொடுக்க வேண்டும்'' என்றார்.