வெளியிடப்பட்ட நேரம்: 17:16 (06/12/2017)

கடைசி தொடர்பு:17:28 (06/12/2017)

கோவையைத் தொடர்ந்து நெல்லையில் ஆய்வு! அதிரடி காட்டும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

ஆளுநர் ஆய்வு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருகை தந்த தமிழக ஆளுநர், நெல்லையில் இரு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 25 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு 46,219 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். அவர் நேரடியாக 752 பேருக்குப் பட்டம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், விருந்தினர் மாளிகைக்குத் திரும்பினார். அப்போது சந்திப்பு பேருந்து நிலையத்துக்குச் சென்ற அவர், அங்கு தூய்மை இந்தியா திட்டத்தின் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியும் அவருடன் சென்றார். 

குப்பைகளைச் சுத்தம் செய்த அவர், அங்கிருந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார். பேருந்து நிலையத்தில் இருந்த ஹோட்டல் ஒன்றில் ஆய்வு செய்த அவர், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பின்னர், பயணிகளிடம் தூய்மை இந்தியா திட்டம் குறித்த பிட் நோட்டீஸ்களை வழங்கி, உறுதிமொழி எடுத்துக்கொண்டார். 

நெல்லையில் ஆய்வு

பின்னர் பாளையங்கோட்டை சென்ற அவர், லூர்துநாதன் சிலை அருகில் உள்ள வீடுகளுக்குச் சென்று மக்களிடம் உரையாடினார். அப்போது அவர்களிடம், பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தினார். பொதுமக்களிடம் பேசுகையில், ‘உங்களுடைய வீடும் தெருவும் சுத்தமாக இருக்கின்றன. நீங்கள் வாரத்துக்கு இரண்டு மணிநேரம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பிரசாரம் செய்ய வேண்டும். குறிப்பாக, பெரியவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டால் மக்கள் உங்களின் பேச்சைக் கேட்பார்கள். அதன் மூலம் பிளாஸ்டிக் பயன்படுத்துவது முற்றிலுமாகத் தவிர்க்கப்படும்’ என்று தெரிவித்தார். 

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நெல்லையில் ஆய்வு மேற்கொண்டபோது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மட்டுமே உடன் இருந்தனர். மக்கள் பிரதிநிதிகள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆளுங்கட்சி அமைச்சர், எம்.எல்.ஏ என யாருக்கும் தெரிவிக்காமல் அவராகவே அதிகாரிகளை அழைத்துக்கொண்டு ஆய்வுப் பணியில் ஈடுபட்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.  

ஆய்வு

இதனிடையே, ஆளுநரின் வருகை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதால் அவர் செல்லக்கூடிய பகுதிகளில் பழுதடைந்த சாலைகள் நேற்றே செப்பணிடப்பட்டன. அத்துடன், அந்தப் பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் முன்கூட்டியே அகற்றினார்கள். சாலையோரக் கடைகளை மாநகராட்சி வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். சந்திப்பு பேருந்து நிலையத்தில் கடந்த பல மாதங்களாக உடைந்து கிடந்த கழிவுநீர் ஓடையின் மூடியை இந்தச் சமயத்தில்கூட சரிசெய்யாத மாநகராட்சி அதிகாரிகள், அதற்கு தற்காலிகமாக மூடியைப் போட்டு மறைத்து வைத்தனர். இந்தச் சம்பவங்கள் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தின.

கோவையில் அண்மையில் ஆளுநர் புரோஹித் தூய்மை திட்டத்தை ஆய்வு செய்ததோடு, அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனார். இந்தச் சம்பவம் அரசியல் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க