பட்டியலினத்தவர்களையும் அர்ச்சகராக நியமனம் செய்யக்கோரி முத்தரசன் ஆர்ப்பாட்டம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாகச் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மாவட்ட செயலாளர் மோகன் மற்றும் 300-க்கும் மேற்பட்டத் தொண்டர்கள் கலந்துகொண்டார்கள். இக்கூட்டத்தில், மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, தலித் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. பசுவதை என்ற பெயரில் தலித் மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். உடனே தலித் மக்களின் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும்.

இந்தியாவில் முதன்முதலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைக் கொண்டு வந்தது தமிழ்நாடு. ஆனால், கேரள அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை அமல்படுத்தி இருப்பதுபோல தமிழகத்திலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தைச் செயல்படுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்கெனவே, ஆகம விதிகளைக் கற்றுத் தேர்ந்துள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலினத்தவர்களையும் அர்ச்சகர்களாக நியமனம் செய்ய வேண்டும்.
 
குடியிருக்க இடமில்லாமல் காலிமனை கேட்டு மனு கொடுத்துள்ள வாழப்பாடி வட்டம் நீர்முள்ளிக்குட்டை ராஜாபட்டினம், பெருமாபாளையம், ஆத்தூர் வட்டம் அம்மன் நகர், 10 ஏக்கர் காலனி, ராமமூர்த்தி நகர், பனமரத்துப்பட்டி பகுதி, நாட்டாமங்கலம், திம்மநாயக்கன்பட்டி, தீரானூர், நடுக்கரடு பகுதி, சந்தியூர், ராஜாராம் நகர், புதூர், சந்தூர், ஆட்டையாம்பட்டி, பிச்சாம்பாளையம், மல்லூர், அம்பேத்கர் பகுதி, கெங்கவல்லி வட்டம், மூலப்புதூர், உலிபுரம், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, வீரகனூர் இந்தப் பகுதி மக்கள் அனைவருக்கும் காலி வீட்டு மனை 5 சென்ட் வீதம் வழங்க வேண்டும். நீண்ட காலமாகக் குடியிருக்கும் வீட்டுக்குப் பட்டா கேட்டு மனு கொடுத்த அனைத்து மக்களுக்கும் காலம் கடத்தாமல் பட்டா வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!