ஆர்ப்பாட்டத்தில் புகுந்த தங்க கடத்தல்காரர்கள்! கடலூரில் பரபரப்பு

முஸ்லீம் ஆர்பாட்டம்

தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழத்தினர் ஆர்ப்பாட்டத்தில், திடீரென்று ஒருவர் காரிலிருந்து குதித்து உள்ளே புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

டிசம்பர் 6, பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று இந்தியா முழுவதிலும் முஸ்லிம்கள் கறுப்பு தினமாக அறிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கடலூரிலும் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். ஆர்ப்பாட்டத்தில், இஸ்லாமியர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கறுப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டனர். அப்போது, திடீரென ஒருவர் காரிலிருந்து குதித்து படுகாயத்துடன் ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் புகுந்தார். அவரை பிடிக்க காரிலிருந்து மீண்டும் இருவர் குதித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பில் இருந்த போலீஸார் அவர்கள் மூவரையும் பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அதன் பின்னரே அப்பகுதி இயல்பு நிலைக்கு வந்தது.

``அவர்கள் மூவரும் பூம்புகார் பகுதியைச் சேர்ந்த தங்கத்தைக் கடத்தும் கும்பல். இலங்கையிலிருந்து பூம்புகாருக்கு தங்க கட்டிகளைக் கடத்தி வந்துள்ளார்கள். அதில், 37 தங்க கட்டிகள் குறைந்துள்ளன. அதை, அக்கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் விற்றுள்ளார். இதையறிந்த அக்கூட்டத்தைச் சேர்ந்த சிலர், ``யாரிடம் விற்றாய். அவரைக் காட்டு" என்று தங்க கட்டிகளை விற்ற நபரை காரில் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்கள். அப்போது கார், கடலூர் ஆர்ப்பாட்ட பகுதிக்கு வந்ததும் கூட்ட நெரிசலால் கார் வேகம் குறைந்துள்ளது. அதைப் பயன்படுத்தி காரில் இருந்து குதித்து தப்பிவிடலாம் என்று தங்கத்தை விற்றவர் காரிலிருந்து குதித்து படுகாயத்துடன் கூட்டத்துக்குள் புகுந்துள்ளார். காரில் இருந்த மற்ற மூவர் காரை அதே இடத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர்'' என்று கூறப்படுகிறது. பிடிபட்ட மூவரிடமும் கடலூர் என்.டி காவல்நிலைய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!