வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (06/12/2017)

கடைசி தொடர்பு:19:00 (06/12/2017)

ஏரியிலிருந்து வீணாகும் நீர்! தண்ணீர் பஞ்சம் வரும் என மக்கள் எச்சரிக்கை

'ஏரியிலிருந்து தண்ணீர் வீணாக வெளியில் சென்றுகொண்டிருக்கிறது அதை அடையுங்கள்' என்று பொது மக்கள் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் அதிகாரிகள். இதேநிலை நீடித்தால் இப்பகுதியில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று அச்சப்படுகிறார்கள் ஜெயங்கொண்டம் மக்கள்.

                 

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் பல ஆறு, குளங்கள் மற்றும் கண்மாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ஆவேரி ஏரி. இந்நிலையில் தொடர் மழை காரணமாக 3 நாள்களாக முன்பு ஜெயங்கொண்டம் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏரி நிரம்பியது. மேலும், ஏரிக் கரைகள் பலவீனமாக இருந்ததால் எம்.ஜி.ஆர் நகர், மேலக்குடியிருப்பு மற்றும் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் உள்ளிட்ட ஏரிக்கு தாழ்வாக உள்ள பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டதால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ-விடம் கோரிக்கை வைத்தனர். 

                   

இதையடுத்து ஆவேரி ஏரிக்கு வந்த எம்.எல்.ஏ மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிக்கு தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் ஏரியில் உள்ள தண்ணீரைக் கரடிக்குளம் ஏரிக்குச் செல்லும் வகையில் கழுங்குகளை உடைத்து நீரை வெளியேற்றினர். இந்நிலையில் தற்போது மழையில்லாத சூழ்நிலையில் உடைத்த கழுங்குகளை அடைக்க வேண்டும் எனப் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா். இதனால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதுபோல் தண்ணீர் வெளியேறினால் 10 நாள்களில் ஏரியில் தண்ணீர் இருக்காது. இன்னும் கொஞ்ச காலத்தில் குடிநீருக்கு இப்பகுதியில் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரித்தனர். அதுமட்டுமல்லாமல் ஏரியில் உள்ள காட்டாமணக்குச் செடிகளை அகற்றவும் ஏரியைத் தூா்வார வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.