வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (06/12/2017)

கடைசி தொடர்பு:20:40 (06/12/2017)

`மரணப்படுக்கையில் கிடக்கும் மண்ணை நலமாக்க வேண்டியது நமது கடமை' - மாணவர்களுக்கு அறிவுரை

மண்ணைச் சாகடித்தது போதும் இனியாவது மண் வளத்தைக் காப்போம். இது இளைஞர்களால்தான் முடியும் என்று மண் வளத்தைக் காப்பது என்ற கருத்தரங்கம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது.

                      

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உலக மண்தினத்தை முன்னிட்டு அன்னை தெரசா மெட்ரிக்பள்ளியில் மரம் நடும்விழா மற்றும்  மண் வளம் காப்பது பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு முதல்வர் தனலெட்சுமி தலைமை வகித்தார். கருத்தரங்கத்தில் மண்வளம் காப்பது, பிளாஸ்டிக் பொருள்களை மனிதர்கள் தவிர்க்க வேண்டும். வயல்களில் ரசாயன உரங்கள் இடுவதைத் தவிர்ப்பது, இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும். வீட்டில் சேகரிக்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை எனப் பிரித்து ஊராட்சி பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுப்புறங்களைச் சுகாதாரமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்டவை பற்றி பள்ளி தாளாளர் முனைவர் முத்துக்குமரன் பேசிவிட்டுச் சென்றார்.               

அடுத்ததாக முதல்வர் தனலெட்சுமி பேசத்தொடங்கினார். "மண்வளத்தைக் காப்போம் என்று பேசிவிட்டு போவதல்ல. இந்தக் கூட்டம்  மண்ணை நாம் எப்படி மலடு ஆக்கிகொண்டிருக்கிறோம் என்று தெரிந்துகொள்ள வேண்டும்" என்று பேசத்தொடங்கினார். "நமது நிலம் முழுக்க மண் இருந்தாலும், மேல்பரப்பிலுள்ள ஓர் அங்குல மண்தான் வளமானது. இந்த ஓர் அங்குல மண் உருவாக, 300 முதல் 1,000 ஆண்டுகள் வரை ஆகும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இவ்வளவு மகத்தான மண்ணைப் பற்றிய கவலை எதுவும் இல்லாமல், சுயநலமே பிரதானமாகக் கொண்டதன் விளைவுகளைத் தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். ஆனாலும், அனுபவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளவேயில்லை. விளைச்சல் வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்துக்காக, வரைமுறையில்லாமல் ரசாயன உரங்களை மண்ணில் போட்டு மண்ணை சாக அடித்துக்கொண்டிருக்கிறோம். 

இத்தனை ரசாயனங்களின் பாதிப்பு, விளைச்சல் வழியாக நமக்குத்தானே மீண்டும் வருகிறது. மரணப்படுக்கையில் கிடக்கும் மண்ணை நலமாக்க வேண்டியது நமது கடமை. இதுவரை போனது போகட்டும். உலக மண்வள நாளான இன்று முதலாவது, ரசாயனங்களை மண்ணில் கொட்டுவதைத் தவிர்த்து, இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தி வேளாண்மை செய்தால் ஓரளவுக்காவது மண்ணை மீட்கமுடியும். இதற்கு நீங்களும் தயாராக வேண்டும். இதைத் தெரிந்துகொண்டு உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் மண்ணின் அருமை பெருமைகளை எடுத்துக் கூற வேண்டும். மாற்றத்துக்குப் பாடுபடுங்கள்" என்று முடித்தார்.

கருத்தரங்கின் இறுதியில் மண்வளம் காப்போம் என ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். மேலும், மண்வள தினத்தைமுன்னிட்டு பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளால் மரக்கன்றுகள் நடப்பட்டன. முன்னதாக, கருத்தரங்கத்தில் சண்முகம், இடையார் ஊராட்சி செயலாளர் அய்யப்பன், மனவள கலைமன்ற பேராசிரியர்கள் இளங்கோவன், பாலு, மாலதி ஆகியோர் கலந்துகொண்டனர்.