துணை வேந்தர் பேச்சில் திருத்தம் செய்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்! - பட்டமளிப்பு விழாவில் சுவாரஸ்யம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவின்போது துணை வேந்தர் பேசியதில் ஏற்பட்ட சிறிய கருத்துப் பிழையை ஆளுநர் திருத்தம் செய்தார். 

பட்டமளிப்பு விழா

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 25 வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டார். மொத்தம் 46,219 மாணவ, மாணவிகள் இன்று பட்டம் பெற்ற நிலையில், ஆளுநர் நேரடியாக 752 பேருக்கு பட்டங்களை வழங்கினார். இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. நூருல் இஸ்லாம் கல்லூரி மாணவி ரகைனா பரீதா, ராணி அண்ணா கல்லூரி மாணவி கவுரி ஆகியோர் இரட்டைப் பதக்கம் பெற்றனர். டி.டி.என்.எம்.எஸ் கல்லூரி மாணவரான நாடார் ஆல்வின் என்பவர் மூன்று பதக்கங்களை வென்றார்.

பட்டமளிப்பு விழாவின்போது வரவேற்புரை ஆற்றிய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான பாஸ்கர், ‘‘பல்கலைக்கழகத்தின் வேந்தருக்கு கல்வித்துறையிலும் அரசு நிர்வாகத்திலும் நிறைய அனுபவம் இருக்கிறது. மஹாராஷ்ட்ராவின் விதர்பா மண்டலத்தைச் சேர்ந்த ஆளுநர், இதற்கு முன்பு அஸ்ஸாம் மாநிலத்தின் ஆளுநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். நாக்பூர் தொகுதியிலிருந்து அவர் 3 முறை எம்.பி-யாகத் தேர்வு செய்யப்பட்டவர். அதனால் அரசியல் மற்றும் திட்டங்களைத் தீட்டும் பணிகளில் முக்கியப் பங்காற்றிய அனுபவம் கொண்டவர்.

நாக்பூரிலிருந்து வெளியாகும் ‘தி ஹிட்டவாடா’ என்ற தினசரி நாளிதழின் நிர்வாக ஆசிரியராகத் தற்போதும் இருந்து வருகிறார். சுதந்திரப் போராட்ட வீரரான கோபால கிருஷ்ண கோகலேவால் கடந்த 1911-ம் தொடங்கப்பட்ட பாரம்பர்யம் கொண்ட பத்திரிகை இது’ என்று பேசினார். அப்போது குறுக்கிட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், `துணை வேந்தர் இங்கே பேசும்போது நான் `தி ஹிட்டவாடா’ நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருப்பதாகக் குறிப்பிட்டார். அதில் சிறிய திருத்தம். `நிர்வாக ஆசிரியராக இருந்தார்’ எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும்’ எனப் பேசினார். 

பட்டம் பெறுபவர்கள்

பல்கலைக்கழகத்தின் உள்ளேயே 5 ஏக்கர் பரப்பளவில் ஒரு மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட சோலார் மின் திட்டத்தையும் ஆளுநர் தொடங்கி வைத்தார். 3,125 பேனல்கள் கொண்ட இந்தத் திட்டத்தின் மூலமாக ஒரு வருடத்தில் 15 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், டெல்லியில் உள்ள மத்திய அரசின் தொழில்நுட்பப் பூங்காவின் தலைமை இயக்குநரான ஓம்கார் ராய் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!