தாயைக் கொன்றுவிட்டு தப்பிய தஷ்வந்த் மும்பையில் கைது!

சிறுமி ஹாசினி கொலையில் ஜாமீனில் வந்த தஷ்வந்த, சென்னை மாங்காட்டில், அவரது  தாயைக் கொன்றுவிட்டு தப்பினார். 


சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கடந்த பிப்ரவரியில் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்யவே, அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தஷ்வந்த், சென்னை மாங்காட்டை அடுத்த குன்றத்தூரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். குன்றத்தூர் வீட்டில் தாய் சரளாவைக் கொன்றுவிட்டு நகைகளுடன் தஷ்வந்த் கடந்த 2-ம் தேதி மாயமானார்.  

செலவுக்குப் பணம் கொடுக்காததால், தாயை இரும்புக் கம்பியால் தாக்கிக் கொலை செய்துவிட்டு தஷ்வந்த தலைமறைவானதாக அவரது தந்தை சேகர் போலீஸில் புகார் அளித்தார். புகாரை அடுத்து நகைகளுடன் தலைமறைவான தஷ்வந்தை போலீஸார் தேடிவந்தனர். இந்தநிலையில், கடந்த 5 நாள்களாகத் தலைமறைவாக இருந்த தஷ்வந்தை மும்பையில் தமிழக போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தஷ்வந்தை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தமிழகம் அழைத்து வரும் வேலைகளில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!