வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (06/12/2017)

கடைசி தொடர்பு:21:20 (06/12/2017)

மீனவர்கள் சொந்த ஊர் திரும்ப தமிழ்நாடு அரசு நிவாரண உதவிகள் அறிவிப்பு..!

பிற மாநிலங்களில் கரைஒதுங்கியிருக்கும் தமிழக மீனவர்கள், சொந்த ஊர் திரும்புவதற்கு 750 லிட்டர் டீசல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 


ஒகி புயலால் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் சிக்கித் தவித்துவருகின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான மீனவர்கள், குஜராத், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் கரைஒதுங்கியுள்ளனர். இந்த நிலையில், பிற மாநிலங்களில் கரை ஒதுங்கியிருக்கும் மீனவர்கள் தமிழகம் திரும்புவதற்கு தமிழக அரசு உதவிகள் அறிவித்துள்ளது. அதன்படி, பிற மாநிலங்களில் கரை ஒதுங்கியிருக்கும் விசைப்படகுகளுக்கு 750 லிட்டர் டீசலும், நாட்டுப் படகுகளுக்கு 200 லிட்டர் டீசலும் வழங்கப்படும்.

மேலும் மீனவர்களின் உணவுத் தேவைக்காக தலா 1,000 ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்களை மீட்டுவருவதற்காக மாநிலத்துக்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, கர்நாடகாவுக்கு சந்தோஷ் பாபுவும், கேரளாவுக்கு அருண்ராயும், குஜராத்துக்கு சந்திரகாந்த் பி.காம்ளேவும், லட்சத் தீவுக்கு ஜான் லூயிஸ், மஹாராஷ்டிராவுக்கு ஷம்பு கல்லோலிகரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் டீசல் உதவி குறித்து தெரிவித்த குஜராத் கரை ஒதுங்கியிருக்கும் மீனவர்கள், '750 லிட்டர் டீசல் மூலம் பாதி தூரத்தைக்கூடக் கடக்க முடியாது. 1,000 லிட்டர் டீசலாவது வழங்கவேண்டும்' என்று கோரிக்கைவிடுத்தனர்.