கந்துவட்டிப் பிரச்னைக்குப் புதிய தீர்வு: விவசாயிகளுக்கு ரூபே டெபிட் கார்டு மூலம் கடன்!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் காய்கறி பயிர் துறை மற்றும் தென்னிந்திய தோட்டக்கலை அமைப்பு இணைந்து தேசிய கருத்தரங்கை நடத்தினர். இதில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் துணை இயக்குநர் ஏ.கே.சிங், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராமசாமி, தமிழ்நாடு தோட்டக்கலை பயிர்கள் துறை இயக்குநர் அர்ச்சனா பட்நாயக், நபார்டு வங்கியின் தலைமைப் பொதுமேலாளர் நாகூர் அலி ஜின்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாகூர் அலி ஜின்னா

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நபார்டு வங்கியின் தலைமைப் பொதுமேலாளர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "விவசாயிகளைப் பொறுத்தவரை மூன்று பிரச்னைகள்தான் அவர்களை அச்சுறுத்திவருகிறது. நீர் மேலாண்மை, கந்துவட்டி மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகிய மூன்றும்தான் விவசாயிகள் சந்திக்கும் முக்கியப் பிரச்னை.

இவற்றில் குடிமராமத்துப் பணிகள் மூலம் ஏரி, குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் மூலம் இந்தப் பணிகளைச் செய்வதற்கு தமிழக அரசுடன் பேசியுள்ளோம். அதேபோல, நீர் குறித்து விழிப்பு உணர்வு செய்வதற்காக, ஒவ்வொரு கிராமத்திலும் நீர் தூதர்களை நியமித்துள்ளோம். அவர்கள், அந்தந்த ஊர்களில் விவசாயிகளிடம் நீர் மேலாண்மை குறித்து விழிப்பு உணர்வு செய்வார்கள்.

கந்துவட்டி பிரச்னையைத் தடுப்பதற்காக, விவசாயிகளுக்கு ரூபே டெபிட் கார்டு மூலம் கடனுதவி வழங்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, குறைந்தபட்சம் 3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். இதற்கு 7 சதவிகிதம் வட்டி. கடனுதவி அதிகரிக்க, அதிகரிக்க வட்டித் தொகையும் மாறுபடும். விவசாயிகளின் நில அளவு, பயிர் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து கடன் வழங்கப்படும். இதற்காக, சுமார் 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!