வெளியிடப்பட்ட நேரம்: 21:13 (06/12/2017)

கடைசி தொடர்பு:10:50 (07/12/2017)

``நாங்கள் மீண்டு எழ 10 ஆண்டுகள் ஆகும்... ஒகி பேரிடர் இல்லையா?” - குமுறும் குமரி மக்கள்

ட்டுமொத்த தமிழகத்தையும் இப்போது புரட்டிப் போட்டிருக்கும் பெயர் ஒகி. இதனால் நிலைகுலைந்து நிற்கிறது கன்னியாகுமரி மாவட்டம். இன்னும் இதனை தேசியப் பேரிடராக அறிவிக்காமல் இருப்பதுதான் வேதனை. இதுபோன்ற பல இன்னல்களிலிருந்து மீண்டு வந்து இருக்கிறது கன்னியாகுமரி. 1882-ம் ஆண்டில் ஏற்பட்ட பேரழிவு, 1991-ல் பெய்த கனமழை பேரழிவு, 2004-ல் சுனாமி கொடுத்த சித்ரவதை இவற்றையெல்லாம் தாண்டி, மீண்டெழுந்த கன்னியாகுமரி ஒகி புயலால் சுயத்தை இழந்து நிற்கிறது. கடந்த மாதம் 24-ம் தேதிதான் கன்னியாகுமரியில் பொதுமக்களுக்கு சுனாமி விழிப்புஉணர்வு ஒத்திகையைச் செய்து காட்டியது மாவட்ட நிர்வாகம். சுனாமி வரப்போவதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்தது. ஆனால், அப்போதுவரை கன்னியாகுமரியை இதுபோன்றதொரு புயல் சீரழிக்கும் என்று யாரும் சொல்லவில்லை.

 

வதந்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கைதான் விடுத்தது. நவம்பர் 30-ம் தேதி காலை கனமழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல மழையோடு பெரும் காற்றும் சேர்ந்து தனது உக்கிர ஆட்டத்தை ஒகி புயல் என்கிற பெயரில் நடத்தியது. புயல் பற்றிய எந்த முன்னறிவிப்பையும் மாவட்ட நிர்வாகமோ, தமிழக அரசோ, மத்திய அரசோ வெளியிடவில்லை. இதுதான் இன்று கன்னியாகுமாரி மாவட்டம் வேரோடு சாய்ந்து நிற்பதற்கு முக்கியக் காரணம். வழக்கமாக மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மழையைப் பொருட்படுத்தாது மீன்பிடிக்கச் சென்று விட்டனர். ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கும் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்களுக்கும் எந்தத் தகவலும் போய்ச் சேரவில்லை. அதனால் கடலிலிருந்து கரைக்கு வந்தவர்கள் புயலில் சிக்கி மாயமானார்கள்.

அவர்களை உடனடியாக மீட்கும் வகையில் தமிழக அரசிடம் ஹெலிகாப்டர் வசதிகள் இல்லை. கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் படகுகளும் சரியாகச் செயல்படவில்லை. கடலில் தத்தளித்த மீனவர்களை சக மீனவர்களே மீட்டுக் கொண்டிருந்த துயரம் நடந்தது. இதுவரை எத்தனை மீனவர்கள் கடலில் மாயமானார்கள் என்கிற புள்ளி விவரம்கூட சரியாகக் கொடுக்கப்படவில்லை. மீனவர்களைக் காப்பாற்றாத வக்கற்ற தமிழக அரசு, அதேநேரத்தில் மீனவ நண்பனான எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழாவை கோவையில் நடத்திக் கொண்டிருந்தது. மீனவர்களைச் சுடுவதற்கும்  தாக்குவதற்கும்தான் இந்தியக் கடற்படை பயன்படுத்தப்படுகிறது. உடல் உழைப்பைக் கொடுத்து, பிழைப்புக்காகக் கடலுக்குச் செல்லும் மீனவர்களை எப்போதும் இந்திய அரசு காப்பாற்ற மறுக்கிறது. 

விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் இருந்தபோது, இலங்கை அரசுக்கு உதவிய கப்பற்படை, தமிழக மீனவர்களைக் காப்பாற்ற எந்த முனைப்பும் காட்டாமல் மந்தமாக இருந்தது. ஒருபுறம் இலங்கை அரசால் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிற மீனவர்களைக் காக்காமல், புயல் முன்னெச்சரிக்கையும் வெளியிட முன்வராமல் இருக்கிறது தமிழக அரசு.

 

மத்திய அரசோ மீனவர்களின் மானியத்தினை ரத்து செய்ய வீ.டி.ஓ.வில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது, குமரி மாவட்டத்தில் பாதிக்குமேல் மீனவர்கள். கேரளாவில் உள்ள கொல்லம், முனம்பம் துறைமுகங்கள் வழியாக மீன்பிடித்து வருகிறார்கள். அவர்களைக் காப்பாற்ற கேரள அரசு களத்தில் இறங்கி வேலைசெய்தது. இதுவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிக்காக 40 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் அதில் 28,000 கோடி இனயம் பகுதியில் துறைமுகம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக துறைமுகம் அமைக்கவிடாமல் மீனவர்கள் தடுத்துக் கொண்டிருந்தார்கள். இதனால், கன்னியாகுமரி மீனவர்களின் மேல் மத்திய அரசு கோபத்தில் இருந்தது. அதற்குப் பதிலடி கொடுக்கும்வகையில்தான் மத்திய அரசு வஞ்சம் வைத்து பழிவாங்கி விட்டதாக மீனவர்கள் உணர்கிறார்கள். பெருமழை பெய்து கொண்டிருக்கும்போது, காற்றில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. மின் கம்பங்கள் விழுந்தன. அதனால் மின்சாரம் நிறுத்திவைக்கப்பட்டது. சுமார் ஐந்து நாள்கள் இருட்டில் குமரி மாவட்டம் தத்தளித்தது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து விளைநிலங்களை அழித்துப் போட்டது. கன்னியாகுமரியில் தற்போது நடந்து வரும் ஆறுவழி தேசிய நெடுஞ்சாலை பல நீர்நிலைகளை மூடி அதன்மேல் சாலையும் போட்டதால்தான வீடுகள் இருக்கும் பகுதிக்குள் தண்ணீர் வந்தது. நெடுஞ்சாலைகள் அமைக்கும் போது சுற்றுச் சூழல் ஆய்வு செய்யப்படவில்லை என்பதுதான் இதற்குக் காரணம்.

 

தற்போது பல ஆயிரக்கணக்கான மரங்கள் சேதமாகி முறிந்து விழுந்து விட்டன. இன்னும் பத்து ஆண்டுகளுக்கு மேல் கன்னியாகுமரியில் எந்த ஒரு மரத்தையும் வெட்டத் தடை உத்தரவுதான் போட வேண்டும். சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசோ 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இன்னும் குமரி மாவட்டம் மீண்டெழ 10 ஆண்டுகளாவது ஆகும். அதுவரை விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள், பின் தங்கிய மாவட்டங்களில் பட்டியலில்தான் இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அரசியல்வாதிகள், கன்னியாகுமரியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதைவிட தங்களுடைய கட்சிப் பணத்திலிருந்து பெரும் தொகையை கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காகச் செலவிட வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆறுதல் என்பதைத் தவிர்த்து அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றித் தரவேண்டும். தொடர்ந்து தமிழக அரசால் புறக்கணிக்கப்பட்டு வந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய தொழில் வளர்ச்சி எதுவும் கிடையாது. மீன்பிடித் தொழில், ரப்பர், நெல் விவசாயம், தேன் உற்பத்தி இவற்றை நம்பியே இருக்கிறது மக்களின் வாழ்வாதாரம். இம்மாவட்ட மக்களின் வாழ்வைச் சிதைத்து விட்டுச் சென்று விட்டது ஒகி புயல். அதன் தாக்கம் ஒட்டுமொத்த மாவட்டத்தின் பொருளாதாரத்திலும் ஏற்பட்டுள்ளது. எத்தனை பேரிடர்கள் வந்தாலும் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் இருக்கும் தமிழக அரசு, எப்போதுதான் திருந்தப் போகிறதோ?

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்