Published:Updated:

`அதிகரித்த கொரோனா.. சுட்டிக்காட்டிய வல்லுநர்கள்!' - 10ம் வகுப்பு ஆல் பாஸை அறிவித்த முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் வரும் 15-ம் தேதி நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் வழக்கம்போல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதால் அப்போது தேர்வுத் தேதி குறிப்பிடப்படாமல் முதல்முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

இரண்டாவது முறையாக ஜூன் 1-ம் தேதி தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டு அதுவும் ஜூன் 15-ம் தேதி நடக்கும் என ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா பரவல் அதிகமாகிக்கொண்டே வரும் இந்த நேரத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வு நடந்தால் அது பல லட்சம் மாணவர்களின் உடல் நலனுக்கும் எதிர்காலத்துக்கும் கேடு விளைவிக்கும் எனவே தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

மாணவர்கள்
மாணவர்கள்

ஆனால், குறித்த தேதியில் நிச்சயமாகத் தேர்வு நடத்தப்படும் எனக் கூறிய தமிழக அரசு அதற்கான தேர்வு அட்டவணை, ஹால் டிக்கெட் மற்றும் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் என அனைத்தையும் மேற்கொள்ளத் தொடங்கியது. இந்நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வு தொடர்பான வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பத்தாம் வகுப்புத் தேர்வு தொடர்பாகவும் மாணவர்களின் நலன் தொடர்பாகவும் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். தற்போதைய சூழலில் தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது எனக் கூறி பத்தாம் வகுப்புத் தேர்வு தொடர்பாகத் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்து வழக்கை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் மற்றும் 11-ம் வகுப்புக்கு மீதமுள்ள தேர்வுகள் என அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

அப்போது பேசிய முதல்வர், ``தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் 15 முதல் 25 -ம் தேதிவரை நடத்தத் தமிழக அரசு ஏற்கெனவே ஆணை பிறப்பித்திருந்தது. அதற்கான நடவடிக்கைகளையும் அரசு எடுத்துவருகிறது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அதில் தற்போது கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் தேர்வைத் தள்ளிவைக்க அரசு பரிசீலிக்க வேண்டும் என நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இதுகுறித்து அரசு விரிவாக ஆய்வு செய்து தற்போதுள்ள சூழலில் கொரோனா தொற்று சென்னையிலும் சில மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

முதல்வர்
முதல்வர்

தற்போதைக்கு நோய்த்தொற்று குறைய வாய்ப்பில்லை என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் வரும் 15-ம் தேதி நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் 11-ம் வகுப்புக்கு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

தேர்வு ரத்து செய்யப்பட்ட காரணத்தால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார்கள். காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணில் 80 சதவிகிதமும் மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவிகிதம் மதிப்பெண்ணும் வழங்கப்படும். 12-ம் வகுப்புத் தேர்வைப் பொறுத்தவரை ஏற்கெனவே தேர்வு எழுதத் தவறியவர்களுக்கான மறு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. சூழ்நிலைக்கேற்ப 12-ம் வகுப்பு மறுதேர்வுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு