Published:Updated:

கோயம்பேட்டிலிருந்து வேளச்சேரிக்கு பரவிய கொரோனா - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பாதிப்பு!

கொரோனா பாதிப்பால் வேளச்சேரியில் தடை செய்யப்பட்ட பகுதி
கொரோனா பாதிப்பால் வேளச்சேரியில் தடை செய்யப்பட்ட பகுதி

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கி, தள்ளுவண்டி மூலம் விற்ற வியாபாரி குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அந்த வியாபாரி குடியிருக்கும் தெரு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. சென்னையைப் பொறுத்தவரை கோயம்பேடு மார்க்கெட் பகுதியிலிருந்து அதிக அளவில் கொரோனா தொற்று பரவிவருகிறது. இதன்காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டை தற்காலிகமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும், இந்த மார்க்கெட்டை திருமழிசைக்குக் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் திருமழிசையில் மார்க்கெட் செயல்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கு கோயம்பேடு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

5 சிறுவர்கள் உட்பட 11 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. அதனால் அந்தத் தெருவுக்கு சீல் வைத்துள்ளோம். சீல் வைக்கப்பட்டுள்ள பகுதியில் குடியிருப்பவர்களுக்கு தேவையானவற்றைச் செய்துகொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
மாநகராட்சி அதிகாரிகள்
சீல் வைக்கப்பட்ட வேளச்சேரி ஏ.என் முதலியார் தெரு
சீல் வைக்கப்பட்ட வேளச்சேரி ஏ.என் முதலியார் தெரு
`3 தங்கைகள்; குடும்பச் சுமையைச் சுமந்தவர்’- பணிமுடிந்து வீடு திரும்பிய பெண் காவலருக்கு நேர்ந்த சோகம்!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் வேலைபார்த்தவர்கள், காய்கறிகளை வாங்கச் சென்ற வியாபாரிகள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலைபார்த்துவிட்டு வெளியூர் சென்றவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால்தான், கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளை மொத்தமாக வாங்கி, வேளச்சேரி பகுதியில் தள்ளுவண்டி மூலம் விற்ற வியாபாரி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வியாபாரி குடியிருந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஏ.என் முதலியார் தெருவை தடைசெய்யப்பட்ட பகுதியாக மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பில் வேளச்சேரி பகுதி
போலீஸ் பாதுகாப்பில் வேளச்சேரி பகுதி

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்துவரும் வியாபாரி ஒருவர், கோயம்பேடு மார்க்கெட்டுக்குச் சென்று காய்கறிகளை வாங்கி விற்றுவந்துள்ளார். அவருக்கு கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து கொரோனா தொற்று பரவியுள்ளது. அவர்மூலம் அவரின் வீட்டில் உள்ள 5 சிறுவர்கள் உள்பட 11 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. அதனால் அந்தத் தெருவுக்கு சீல் வைத்துள்ளோம். சீல் வைக்கப்பட்டுள்ள பகுதியில் குடியிருப்பவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்க ஏற்பாடுசெய்துள்ளோம். அந்தப் பகுதியிலிருந்து யாரும் வெளியில் வரவும், வேறு நபர்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காய்கறி வியாபாரி எங்கெல்லாம் சென்றார் என்ற ட்ராவல் ஹிஸ்ட்ரியையும் ஆய்வுசெய்துவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு