வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (06/12/2017)

கடைசி தொடர்பு:16:24 (30/06/2018)

ஐந்து வருடம் இல்லாத மழை இந்த ஆண்டு பெய்துள்ளது..! கரூர் மக்கள் ஆனந்தம்

 

"காவிரி ஓடினாலும், காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும், கரூர் மாவட்டத்தின் தென்பகுதிகளில் மழை பெய்தாதான் விவசாயம் என்ற நிலை. சுண்ணாம்பு மண் என்பதால், வானம் பார்த்த பூமியாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. பொதுவாகத் தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக சரியாக மழை இல்லை. அதனால், கரூர் மாவட்டத்தில் அநேக ஊர்களில் விவசாயம் செய்ய மட்டுமல்ல, குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காம மக்கள் அல்லாடிப்போனார்கள். ஆனால், இந்த வருடம் கடந்த ஐந்து வருடங்களில் பெய்யாத மழை எங்க மாவட்டத்தில் பெய்ய, நாங்க மட்டுமல்ல, எங்க வயல்களில் போட்ட வெள்ளாமையும் பச்சையா; பசுமையா மாறியிருக்கு" என்று குதூகலிக்கிறார்கள் கரூர்வாசிகள்!.

 

கரூருக்குத் தென்பகுதியில் உள்ள தான்தோன்றிமலை ஒன்றியம், கடவூர், அரவக்குறிச்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளை உண்மையில் இந்த மழை மகிழச் செய்திருக்கிறது. இதுபற்றி பேசிய, உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த விவசாயிகள்,
"கடந்த ஐந்து வருடங்களாக கரூர் மாவட்டத்தில் சரியான மழையில்லை. இதனால், எங்க வயல்களில் நாங்க எந்த வெள்ளாமையையும் பண்ணலை. சாயப்பட்டறை, திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு வேலைக்குப் போய் குடும்பத்தை கவனிச்சோம். ஆனால், அந்த வருமானம் 'வயித்துக்கும் பத்தலை; வாயிக்கும் பத்தலை'ங்கிற நிலைமைதான். இன்னும் சிலர் ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளை வளர்த்து, வயித்துப்பாட்டைக் கவனித்துவந்தனர். ஆனால், அவை மேயக்கூட புல், பூண்டு முளைக்காத அளவுக்குக் கரூருக்கு தெற்கே உள்ள பகுதிகள் பாலைவனமா வறண்டு கிடந்தன. 'இந்த நிலைமை இந்த வருடமும் தொடர்ந்தா, எல்லாரும் கொத்துக் கொத்தா நாண்டுகிட்டு சாகவேண்டியதுதான்'ன்னு கலங்கி நின்னோம். ஆனால், கடந்த அஞ்சு வருஷம் கொடுக்காத மழையை மாரியாத்தா எங்க மண்ணுல பேய வெச்சு, எங்க வெள்ளாமையைச் செழிப்பாக்கிட்டா. நெல், கம்பு, சோளம்ன்னு நாங்க வயல்கள்ல போட்ட வெள்ளாமை முச்சூடும், பச்சைப் போர்வை போர்த்துனாப்புல இருக்கு. எங்க மனசுலயும் இத்துப்போன நம்பிக்கையும் துளிர்விட தொடங்கியிருக்கு. வானத்துக்கு நன்றி" என்று மேலே கைகளைத் தூக்கி வானத்தைப் பார்த்துக் கும்பிடுகிறார்கள்.