வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (06/12/2017)

கடைசி தொடர்பு:10:38 (07/12/2017)

பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய கணவன் மற்றும் மாமியாருக்கு 10 ஆண்டுகள் சிறை..!

பெண்ணை கொடுமைப்படுத்தி, தற்கொலைசெய்துகொள்ளக் காரணமாக இருந்த தாய்க்கும் மகனுக்கும், தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள தெய்வதானம் கிராமத்தைச் சேர்ந்தவர், சாமுண்டீஸ்வரி (21). இவருக்கும் முத்துராமலிங்கம் (32) என்பவருக்கும் கடந்த 2011 -ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் நடந்த சில நாள்களில், கணவர் முத்துராமலிங்கம் வேலைக்காக வெளிநாடு சென்றுவிட்டார். இந்நிலையில், வீட்டிலிருந்த மருமகள் சாமுண்டீஸ்வரியை மாமியார் ஆறுமுகம் தரக்குறைவாகப் பேசியும், பல்வேறு குறைகளைக் கூறியும் கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும், வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த கணவர் முத்துராமலிங்கமும் சாமுண்டீஸ்வரியை கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த சாமுண்டீஸ்வரி, தனது தாயார் வீட்டுக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில், மனைவி சாமுண்டீஸ்வரியை சமாதானம் செய்து தன் வீட்டுக்கு அழைத்துவந்து, மாமியாரும் கணவர் முத்துராமலிங்கமும் மீண்டும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய தாய் மகனுக்கு சிறை


இதனால் மனம் வெறுத்த சாமுண்டீஸ்வரி தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலைசெய்துகொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாமியார் ஆறுமுகத்தையும் கணவர் முத்துராமலிங்கத்தையும் கைதுசெய்தனர். இவ்வழக்கு, ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
வழக்கை விசாரித்த ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதியும், மகளிர் நீதிமன்ற நீதிபதியுமான ஏ.கயல்விழி,  தற்கொலை செய்துகொள்ளக் காரணமாக இருந்த மாமியார் ஆறுமுகத்துக்கும், கணவர் முத்துராமலிங்கத்துக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இந்தத் தொகையை கட்டத் தவறினால், மேலும் ஓராண்டு சிறைத்தண்டனையும் விதிப்பதாகத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.