நெல்லையில் கோயில் சிலைகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு

நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே, கோயில் சிலைகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது,. இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க நிர்வாகிகள், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

சிலைகள் உடைப்பு

நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம், செட்டிகுளம். இங்கு சுடலைமாடன் சாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் சிலைகள் அனைத்தையும் யாரோ மர்ம நபர் அடித்து உடைத்துவிட்டார். இதைப் பார்த்த கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்தக் கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் நெல்லை மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவரான பால் மாரியப்பன் தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்துசேர்ந்தார். அவருடன் ஊர் மக்களும் சேர்ந்து குற்றவாளியைக் கைதுசெய்ய வலியுறுத்தினர். அதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. காவல்துறையினருடன் பா.ஜ.க நிர்வாகிகள் ஆவேசத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனிடையே, இந்தச் சம்பவம் பற்றி விசாரணை நடத்திய போலீஸார், அதே கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் சுதாகர் இந்தச் செயலில் ஈடுபட்டதைக் கண்டுபிடித்தனர். 15 வயது நிரம்பிய சுதாகர் கடந்த இரு மாதங்களாகச் சற்று மனநிலை சரியில்லாமல் பள்ளிக்குச் செல்லாமல் ஆங்காங்கே சுற்றித் திரிந்ததாகவும், அந்தச் சிறுவனே சிலைகளை உடைத்ததையும் கண்டுபிடித்தனர். சிலை உடைப்பை சுதாகரும் பொதுமக்கள் முன்னிலையில் ஒப்புக் கொண்டதால் பிரச்னை முடிவுக்கு வந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீஸார், சிறுவன் சுதாகரை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!