வெளியிடப்பட்ட நேரம்: 00:15 (07/12/2017)

கடைசி தொடர்பு:10:25 (07/12/2017)

விவசாயம் வேண்டுமா..? இறால் பண்ணை வேண்டுமா? - போர்க்கொடி தூக்கும் பி.ஆர்.பாண்டியன்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே செங்காங்காடு, முனாங்காடு  உள்ளிட்ட கடலோரப் பகுதியைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடல்நீர் உட்புகுந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்புகள்குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார் அனைத்து விவசாயிகளின் சங்க குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

விவசாயம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’பொதுவாக கடலோர மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினத்தில், கடல் 12 மணி நேரம் வடியும், 12 மணி நேரம் கடல் எதிர்க்கும். அப்போது, நீர் முழுவதும் முத்துப்பேட்டை முதல் கோடியக்காடு வரை பெரும் நிலப்பகுதியில் 10 கி.மீ அகலத்தில் தேங்கி நின்று வடியும். இது இயற்கையான அம்சம். ஆனால், அப்பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளதால், கடல்நீர் அதிவேகத்தில் உட்புகுந்து விளைநிலப் பகுதிகளை அழிப்பதும், வெள்ளநீர் தேங்கி, வடிகால் ஆறுகளில் தேக்கம் ஏற்பட்டு உடைப்பு எடுப்பதும், விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. 
இதேபோன்று, வேதாரண்யம் முதல் நாகப்பட்டினம் வரை சட்டத்துக்குப் புறம்பாக இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளதால், ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு, கடல் போல காட்சியளிக்கிறது. இதேநிலை நீடித்தால், விளைநிலங்களை அழிந்துவிடும். இறால் பண்ணைகளை உடனே அகற்ற வழிவகை செய்யவேண்டும்; அப்போதுதான் கடலோரப் பகுதிகளில் விவசாயத்தைக் காக்க முடியும்’ என்றார், 

நீங்க எப்படி பீல் பண்றீங்க